அரசு புள்ளி விபரங்களை தொகுக்க ஊழியர்களுக்கு ஐ.ஐ.எம்.,மில் பயிற்சி
சென்னை:அரசு திட்டங்களுக்கு பயன்படும் வகையில், புள்ளி விபரங்களை தொகுப்பது குறித்து பயிற்சி பெறுவதற்காக, தமிழக அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த, 25 அலுவலர்கள், முதல் முறையாக பெங்களூரு ஐ.ஐ.எம்., நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
'அரசின் திட்டங்கள் முறையாக, மக்களிடம் சென்றடைகிறதா என்பதை ஆய்வு செய்யவும், தகுதியுடைய பயனாளிகள் யாரேனும் விடுபட்டு விட்டனரா என்பதை கண்டறியவும், கடைக்கோடி மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்றடையவும், அரசு திட்டங்களை மேலும் செம்மைப்படுத்தவும், அரசு அலுவலர்களுக்கு தரவு பகுப்பாய்வு குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
'இதற்கு 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும்' என, சட்டசபையில் நிதி அமைச்சர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்த, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பெங்களூருவில் உள்ள, இந்திய மேலாண்மை நிறுவனத்தில், மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது; நேற்று பயிற்சி துவங்கியது.
இதில், முதல்வரின் முகவரித்துறை, தமிழ்நாடு மின் ஆளுமை, கூட்டுறவுத்துறை, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை, கருவூலம் மற்றும் கணக்குத்துறை, வணிக வரித்துறை, சென்னை மாநகராட்சி, பேரூராட்சிகள் இயக்ககம், பதிவுத்துறை, மின் பகிர்மானக் கழகம், ஊரக வளர்ச்சித்துறை, காவல் துறை, மனிதவள மேலாண்மைத்துறை, தமிழ்நாடு குற்ற ஆவணக் காப்பகம், வேளாண்துறை அலுவலர்கள் 25 பேர் பங்கேற்றுள்ளனர்.
இப்பயிற்சிக்கு தமிழக அரசு 35 லட்சம் ரூபாய் ஒதுக்கி உள்ளது.