பட்டாசு ஆலை விபத்தில் பலி 3 ஆக உயர்ந்தது
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3853448.jpg?width=1000&height=625)
விருதுநகர்:விருதுநகர் அருகே சின்னவாடியில் ஸ்ரீசத்தியபிரபு பயர் ஒர்க்ஸ் ஆலையில் பிப். 5ல் நடந்த வெடி விபத்தில் காயமடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சைமன் டேனியல் 33, வீரலட்சுமி 37,பலியாகினர். இதில் ஏற்கனவே ராமலட்சுமி 50, பலியான நிலையில் மொத்த பலி எண்ணிக்கை தற்போது 3 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் அருகே சதானந்தபுரத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு சின்னவாடியில் நாக்பூர் லைசென்ஸ் பெற்ற ஸ்ரீசத்திய பிரபு பயர் ஒர்க்ஸ் என்ற பேன்சி ரக பட்டாசு தயாரிப்பு ஆலை உள்ளது.
இங்கு பிப். 5 மதியம் 2:00 மணிக்கு பட்டாசு தயாரிப்பின் போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து நடந்தது. இதில் 4 அறைகள் வெடித்து சிதறி தரைமட்டமானது, சில அறைகள் சேதமானது.
இவ்விபத்தில் அதிவீரன்பட்டியைச் சேர்ந்த சகோதரிகளான வீரலட்சுமி, கஸ்துாரி 33, மகாலட்சுமி 48, பொம்மையாபுரத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி 55, ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் 50, மீனம்பட்டியைச் சேர்ந்த சைமன் டேனியல், ஆகியோர் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வதுவார்பட்டியைச் சேர்ந்த ராமலட்சுமி பலியானார்.
மேலும் மாணிக்கம், முருகேஸ்வரியை தவிர மற்ற நால்வரும் மதுரையில் தனியார் மருத்துவமனையில் பிப். 6ல் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் பிப். 9 மதியம் சைமன் டேனியல் பலியானார். நேற்று முன்தினம் இரவு வீரலட்சுமி பலியானார். இதையடுத்து இந்த பட்டாசு வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.