மனைவி குத்திக்கொலை வங்கி ஊழியருக்கு ஆயுள்
ஸ்ரீவில்லிபுத்துார்:மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்த கணவரான வங்கி ஊழியர் கண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விருதுநகர் கம்பர் தெருவைசேர்ந்தவர் கண்ணன் 32; பொதுத்துறை வங்கி ஊழியர்.
இவர் மாமா மகளான கற்பகம் 32, என்பவரை திருமணம் செய்திருந்தார். இத்தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்த கண்ணன் அடிக்கடி அவரை துன்புறுத்தி வந்துள்ளார். 2022 ஜன.10ல் கற்பகத்தை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
விருதுநகர் ரூரல் போலீசார் கண்ணனை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.
இதில் கண்ணனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.