மும்பை அணியில் ஜெய்ஸ்வால்

மும்பை: ரஞ்சி கோப்பை அரையிறுதிக்கான மும்பை அணியில் ஜெய்ஸ்வால், துபே இடம் பெற்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ரஞ்சி கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. இதன் காலிறுதியில் மும்பை (எதிர்: ஹரியானா), விதர்பா (எதிர்: தமிழகம்), கேரளா (எதிர்: ஜம்மு காஷ்மீர்), குஜராத் (எதிர்: சவுராஷ்டிரா) அணிகள் வெற்றி பெற்றன. அரையிறுதியில் (பிப். 17-21) குஜராத்-கேரளா (இடம்: ஆமதாபாத்), மும்பை-விதர்பா (இடம்: நாக்பூர்) மோதுகின்றன.

அரையிறுதிக்கான 'நடப்பு சாம்பியன்' மும்பை அணி அறிவிக்கப்பட்டது. இதில் துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 'ஆல்-ரவுண்டர்' ஷிவம் துபே சேர்க்கப்பட்டுள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு மாற்று வீரர்களாக தேர்வான இவர்கள், தேவைப்பட்டால் மட்டுமே துபாய் செல்வர் என்பதால் ரஞ்சி போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டனர்.
'பார்டர்-கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரில் 391 ரன் குவித்த ஜெய்ஸ்வால், சமீபத்தில் முடிந்த காஷ்மீர் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் (4, 26 ரன்) ஏமாற்றினார்.


கேப்டனாக அஜின்கியா ரகானே தொடர்கிறார். சூர்யகுமார் யாதவ், ஷர்துல் தாகூர், தனுஷ், ஷாம்ஸ் முலானி அணியில் உள்ளனர்.

Advertisement