எழிலகம், அமைச்சர் வீடுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இருவர் கைது

சென்னை, சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு எழிலகம், அமைச்சர் சேகர்பாபு வீடு, முதல்வர் கான்வாய், நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் உள்ளிட்டவற்றில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மாலை மொபைல் போனில் தொடர்பு கொண்டு நபர் ஒருவர் பேசி உள்ளார்.

அப்போது, எழிலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடிக்கப்போவதாகவும் கூறி, இணைப்பை துண்டித்தார்.

உடனே காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் எழிலக வளாகம் முழுதும் சோதனை மேற்கொண்டனர்.

இதில் எந்தவித வெடிப்பொருட்களும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.

இதற்கிடையே, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய மற்றொரு நபர், நுங்கம்பாக்கம் ரயில் நிலையம், முதல்வர் கான்வாய், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வீடு உள்ளிட்டவற்றில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி இணைப்பை துண்டித்து உள்ளார்.

தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். மூன்று மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

இச்சம்பவங்கள் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மிரட்டல் விடுத்த மர்மநபரின் மொபைல் எண்ணை வைத்து ஆய்வு செய்தனர். இதில் எழிலகத்திற்கு மிரட்டல் விடுத்தவர் வேலுாரைச் சேர்ந்த பாலாஜி, 43, என்பதும், சமையல் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது.

அதேபோல், அமைச்சர் சேகர்பாபு வீடு, முதல்வர் கான்வாய், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது, தென்காசியை சேர்ந்த, முத்துசிவா, 23, என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

தென்காசி போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement