திருப்பூரில் நிலவிய மூடுபனி; தடுமாறிய வாகன ஓட்டிகள்

திருப்பூர்; திருப்பூரில் நேற்று காலை நீண்ட நேரம் வரை கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது.

வழக்கமாக மார்கழி மாதத்தில் துவங்கும் குளிர்ந்த சீதோஷ்ணம் மற்றும் பனிப்பொழிவு தை மாதம் வரை நிலவும். அவ்வகையில் நடப்பாண்டு கடந்த இரு மாதங்களாக அதிகாலை நேரம் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. மாலை முதல் நள்ளிரவு வரை நீடித்த பனிப்பொழிவு மற்றும் குளிர்காற்று அதிகாலை நீண்ட நேரம் வரை காணப்பட்டு வந்தது.

நேற்று மாசி மாதம் துவங்கிய நிலையில் கடந்த இரு மாதமாக காணப்பட்டது போன்றே நேற்றும் பனிப்பொழிவு காணப்பட்டது. கடுமையான குளிரும் நிலவியது. நிறுத்தியிருந்த வாகனங்களின் மேற்புறத்தில் மூடுபனி இறங்கி ஈரமாக காட்சியளித்தது.

அதிகாலை முதல் கடுமையான பனிப்பொழிவு காரணமாக வெளியிடங்களில் ரோடுகளில் புகை மூட்டமாக காட்சியளித்தது. எதிரே வரும் வாகனங்கள், ரோட்டோரம் வளர்ந்து நிற்கும் உயர்ந்த மரங்கள், கட்டடங்கள் கூட தெளிவாக தெரியாத வகையில் பனிப்பொழிவு அதிகம் இருந்துது. வழக்கமாக காலை நேரம் சிறிது நேரம் காணப்படும் குளிர் சீதோஷ்ணம் நேற்று நீண்ட நேரம் நீடித்தது.

Advertisement