தொழிற்கல்வி படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற அழைப்பு

திருப்பூர்; அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லுாரில் படிக்கும் மாணவர்கள், கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை: அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவு மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எவ்வித வருமான வரம்பு நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு, அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணாக்கர்களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மேலும், 2024-2025ம் கல்வியாண்டில் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள். https://umis.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, வரும், 28ம் தேதி கடைசி நாள்.

ஏற்கனவே, கல்வி உதவி தொகை பெற்று பயின்று வரும் மாணவர்கள்,கல்வி உதவி தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு கல்லுாரிகளில், நடப்பாண்டு கல்வி பயில்வதை சம்மந்தப்பட்ட கல்லுாரி நிர்வாகத்தினர் உறுதிப்படுத்த வேண்டும்.

மேற்கொண்டு விவரம் தேவைப்படுவோர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி தெளிவுபடுத்திக் கொள்ளலாம்இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement