பிரின்டிங் பொது பயன்பாட்டு மையம் நிலம் வழங்க கலெக்டரிடம் முறையீடு
திருப்பூர்; நெருப்பெரிச்சலில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆப்செட் பிரின்டிங் பொது பயன்பாட்டு மையம் கட்டுவதற்கு வழங்க கோரி மாஸ்டர் பிரின்டர் அசோசியேஷன், மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூரில், பின்னலாடை உற்பத்தி துறையின் அங்கமான ஆப்செட் பிரின்டிங் துறையை மேம்படுத்தும் வகையில், பொது பயன்பாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது.
மாஸ்டர் பிரின்டர்ஸ் அசோசியேஷன், 31.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, அரசிடம் சமர்ப்பித்துள்ளது. மத்திய அரசு, 18 கோடி ரூபாய், மாநில அரசு, 6 கோடி ரூபாய் மானியம் வழங்குகின்றன. குழுமத்தில் அங்கம்வகிக்கும் ஆப்செட் பிரின்டிங் நிறுவனங்கள், 7.75 கோடி ரூபாய் பங்களிப்பு செலுத்துகின்றன.
பொது பயன்பாட்டு மையத்தில், அதிநவீன ஆப்செட் பிரின்டிங் இயந்திரங்களை நிறு, உயர் தொழில்நுட்பத்தில் டேக், போட்டோ டேக் போன்றவற்றை உள்ளூரிலேயே தயாரித்து, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு சீரான விலைக்கு கிடைக்க செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
பொது பயன்பாட்டு சேவை மையத்துக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து, மத்திய அரசின் ஒப்புதலுக்கு திட்ட அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. விரைவில் மத்திய அரசு ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பொது பயன்பாட்டு மையம் அமைப்பதற்கான இடம் தேடும் பணியில், மாஸ்டர் பிரின்டர்ஸ் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மாஸ்டர் பிரின்டர்ஸ் அசோசியேஷன் துணை தலைவர் கனகராஜன், துணைச் செயலாளர்கள் கருணாநிதி, திருமலைசாமி, செயற்குழு உறுப்பினர்கள் மூர்த்தி, சண்முகம் ஆகியோர், கலெக்டர் கிறிஸ்துராஜை நேற்று சந்தித்தனர்.
நெருப்பெரிச்சலில், 8 ஏக்கர் அளவில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில், 2 ஏக்கர் நிலத்தை, ஆப்செட் பிரின்டிங் பொது பயன்பாட்டு மையம் அமைப்பதற்கு வழங்க கோரி மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், பரிசீலித்து ஆவன செய்வதாக நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.