காசி தமிழ் சங்கமம் மூன்றாம் கட்டம் சென்னை - பனாரஸ் ரயில் பயணம்

சென்னை:காசி தமிழ் சங்கமத்தின் மூன்றாம் கட்ட பயணத்திற்காக, சென்னை சென்ட்ரல் - பனாரஸ் முதல் சிறப்பு ரயில் சேவையை, கவர்னர் ரவி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கலாசார மையங்களாக திகழ்ந்த வாரணாசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான பிணைப்பை புதுப்பிக்கும் வகையில், 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி, 2022ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. அதன் மூன்றாம் கட்ட நிகழ்வுகள், நாளை முதல் 24ம் தேதி வரை நடக்க உள்ளன.

இந்த முறை சித்த மருத்துவம், பாரம்பரிய தமிழ் இலக்கியம், தேசத்தின் கலாசார ஒற்றுமை ஆகியவற்றுக்கு அகத்தியர் ஆற்றிய பங்களிப்பை எடுத்துக்காட்டும் விதமாக காசி தமிழ் சங்கமம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, சென்னை ஐ.ஐ.டி., உயர் கல்வி நிறுவனம் ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறது.

சென்னை, கோவை, கன்னியாகுமரியில் இருந்து, இதற்காக ஐந்து சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்க உள்ளது. அதில், சென்னை சென்ட்ரலில் இருந்து, 220 பக்தர்களுடன், உ.பி., மாநிலம் பனாரஸ் புறப்பட்ட முதல் சிறப்பு ரயிலை, கவர்னர் ரவி நேற்று துவக்கி வைத்தார்.

சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத் தலைவர் சுதா சேஷய்யன், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி, தமிழக பா.ஜ., துணை தலைவர் கரு.நாகராஜன் பங்கேற்றனர்.

Advertisement