ஷாலிமர் - சில்சார் ரயில் இயக்கம் திடீர் மாற்றம்
திருப்பூர்; திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் ஷாலிமர், சில்சார், பனராஸ் ரயில்கள் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது.
சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட, கவரப்பேட்டை - பொன்னேரி பிரிவு இடையே ரயில்வே பொறியியல் மேலாண்மை பணி நடக்கிறது. இதனால், சென்னை வழியாக செல்லும் சில ரயில்களின் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை (15ம் தேதி) திருவனந்தபுரம் - ஷாலிமர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (எண்:22641), வரும், 18ம் தேதி இயக்கப்படும் திருவனந்தபுரம் - சில்சார் எக்ஸ்பிரஸ் (எண்:12507), திருவனந்தபுரம் வடக்கு - பனராஸ் சிறப்பு ரயில் (எண்:06007) மூன்றும், காட்பாடியில் இருந்து மேல்பாக்கம் - ரேணிகுண்டா வழியாக, ஆந்திர மாநிலம் கூடூர் செல்லும். மூன்று ரயில்களும் வழக்கமாக வழித்தடமான அரக்கோணம், பெரம்பூர் வழியாக செல்லாது; அதே நேரம், பயணிகள் வசதிக்காக கூடுதலாக, திருத்தணி ஸ்டேஷனில் ரயில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.