'ரேஷன் அரிசியில் புழுக்கள் நெளியாது' தரசோதனைக்கு பின்பே வினியோகம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3854033.jpg?width=1000&height=625)
கோவை; கோவை மாவட்டத்துக்கு வந்த தமிழக சட்டசபை பொது நிறுவனங்கள் குழு கோவையில் நடந்து வரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தது. இதை தொடர்ந்து, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டசபை பொது நிறுவனங்கள் குழு தலைவர், அணைக்கட்டு எம்.எல்.ஏ., நந்தகுமார் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகளின் கூட்டம் நேற்று நடந்தது. இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவை மாவட்டத்துக்கு வந்த தமிழக சட்டசபை பொது நிறுவனங்கள் குழு கோவை புலியகுளத்தில் கட்டப்பட்டு வரும் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியை ஆய்வு செய்தோம் அங்கு பழைய விடுதியை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய விடுதி பத்து கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.
விடுதி கட்டுமானத்தின் தரம், எத்தனை நாட்களில் கட்டப்படும், கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் குறித்து விசாரித்தோம், சிமெண்ட் கலவை சேர்ப்பு விகிதங்கள் குறித்து கேட்டறிந்தோம். தரமானதாகவும் திருப்தியளிக்கும் வகையிலும் கட்டுமானத்தின் தரம் இருந்தது. நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் கட்டுமானப்பணியை நிறைவு செய்ய வலியுறுத்தினோம்.
பீளமேடு விளாங்குறிச்சி சாலையில் 17 லட்சம் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள டைட்டல் பார்க் கட்டடத்தை பார்வையிட்டோம். சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் முதன் முதலாக 4.5 கோடியில் பொதுவினியோகத்திட்டத்தில் வினியோகிக்கப்படும் உணவுப்பொருட்களின் தரத்தை முழுமையாக பரிசோதித்து வினியோகிப்பதற்காக உணவு தரக்கட்டுப்பாட்டு பரிசோதனை மையம் கருமத்தம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு பொது வினியோகத்திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் அரிசி,பருப்பு, கோதுமை, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் தரமாகவும் எடை குறையாமலும்
மக்களுக்கு பொதுவினியோகத்திட்டத்தின் வாயிலாக வழங்குவதற்காக இந்த மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இனிமேல் புழுக்களோடும், கற்களோடும் ரேஷன்கடைகளில் அரிசி வினியோகிக்கப்படாது. தரமுள்ளதாக இருக்கும்.
சில வார்டுகளில் 24 மணி நேர குடிநீர் வினியோகமும், சிலவற்றில் நான்கு நாட்களுக்கு ஒரு முறையும், சில இடங்களில் மூன்றுநாட்களுக்கு ஒருமுறையும் மற்ற இடங்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு அனைத்து வார்டுகளிலும் ஒரே மாதிரியாக 24 மணி நேரத்துக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் அதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது.
இவ்வாறு நந்தகுமார் கூறினார்.
கலெக்டர் பவன்குமார் உள்ளிட்ட அதிகாரிகளும், குழுவில் இடம் பெற்றுள்ள எம்.எல்.ஏ.க்களும் உடனிருந்தனர்.
மேலும்
-
பிரின்டிங் பொது பயன்பாட்டு மையம் நிலம் வழங்க கலெக்டரிடம் முறையீடு
-
திருப்பூரில் நிலவிய மூடுபனி; தடுமாறிய வாகன ஓட்டிகள்
-
கருப்புக் கொடி ஏற்றி போராட விசைத்தறியாளர் முடிவு
-
குழந்தை பிறந்து 9 மாதமாச்சு.. உதவித்தொகை வரலை! காத்திருக்கும் தாய்மார்கள் அதிருப்தி
-
கீழே மேம்பாலம்: மேலே 'மெட்ரோ ரயில்'; கோல்டுவின்ஸ்-நீலாம்பூர் வரை 'டபுள் டக்கர்' நெடுஞ்சாலைத்துறை, மெட்ரோ நிறுவனம் ஆலோசனை
-
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி