குழந்தை பிறந்து 9 மாதமாச்சு.. உதவித்தொகை வரலை! காத்திருக்கும் தாய்மார்கள் அதிருப்தி

1

கோவை : மகப்பேறு உதவித்தொகை திட்டத்தில், குழந்தை பிறந்து ஒன்பது மாதங்கள் கடந்தும் முதல் தவணை தொகை கூட, பலருக்கு விடுவிக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

கர்ப்பிணிகளின் நலனுக்காக, 2017ம் ஆண்டு முதல் மத்திய அரசின் மாத்ரு வந்தனா திட்டமும், தமிழகத்தில் 1987-ம் ஆண்டு முதல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்விரண்டு திட்டங்களும் இணைக்கப்பட்டு, தவணை முறைகளில் 2024ம் ஆண்டு ஏப்., மாதம் முதல் மாற்றம் செய்யப்பட்டது. ஐந்து தவணைகளாக விடுவிக்கப்பட்ட தொகை, மூன்று தவணைகளாக மாற்றப்பட்டது.

பிக்மி எண் பதிவு செய்தவுடன், 6000 ரூபாய், பிரசவம் முடிந்த பின்னர் 6000 ரூபாய் மற்றும் ஒன்பது அல்லது பத்தாம் மாதங்களில், குழந்தைக்கு தடுப்பூசி செலுத்திய பின்னர் 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

இதற்கிடையில், மூன்று மற்றும் ஆறாவது மாதங்களில், 2000 ரூபாய் வீதம் மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. முதல் குழந்தை பெறுபவர்களுக்கு வழங்கப்படும் நிதியை, மத்திய அரசு, மாநில அரசு இணைந்தும், இரண்டாம் குழந்தை பெறும் தாய்மார்களுக்கு, மாநில அரசும் நிதி வழங்குகிறது.

முதல் தவணை மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கிடைக்கும். அதே சமயம், இரண்டாம் தவணை, அரசு மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்தவர்களுக்கும், இறுதி தவணை முதல் குழந்தையாக இருப்பின், 'காப்பர்-டீ' பொருத்தியவர்களுக்கும், இரண்டாம் குழந்தையாக இருப்பின், குடும்பக்கட்டுப்பாடு செய்தவர்களுக்கும் மட்டுமே வழங்கப்படும்.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக விண்ணப்பித்தவர்களுக்கு, இதுவரை முதல் தவணை தொகை கூட வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

'விரைவில் கிடைக்கும்'



மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறியதாவது: இரண்டு ஆண்டுகளாக யாருக்கும் தவணைத்தொகை வரவில்லை என்பது சரியல்ல. முதல் குழந்தை பெறுபவர்களுக்கு மட்டும், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இணைந்து நிதி வழங்கப்படுகிறது. இவர்களது, தகவல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறோம். விரைவில் தவணை தொகை கிடைக்கும். இரண்டாம் குழந்தை பெறுபவர்களுக்கு, வழக்கம் போல் நிதி சென்று கொண்டு இருக்கிறது.

''கோவையில், 2024 ஏப்., முதல் தற்போது வரை, 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததில், 8.5 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், 42 ஆயிரம் பேர் விண்ணப்பித்து தொகை பெற்றுள்ளனர். முதல் குழந்தை பெற்றவர்களுக்கும், விரைவில் விடுவிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement