கீழே மேம்பாலம்: மேலே 'மெட்ரோ ரயில்'; கோல்டுவின்ஸ்-நீலாம்பூர் வரை 'டபுள் டக்கர்' நெடுஞ்சாலைத்துறை, மெட்ரோ நிறுவனம் ஆலோசனை
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3854221.jpg?width=1000&height=625)
கோவை; கோவை - அவிநாசி ரோட்டில் கட்டப்படும் மேம்பாலத்தில், கோல்டு வின்ஸ் பகுதியில் 'ரேம்ப்' அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கோல்டுவின்ஸ் முதல் நீலாம்பூர் வரை 5 கி.மீ., துாரத்துக்கு நிலம் கையகப்படுத்தும் செலவை சுருக்கும் வகையில், ஒரே துாணில், 'டபுள் டக்கர்' சிஸ்டத்தில் கீழே மேம்பாலம், மேல்அடுக்கில் 'மெட்ரோ ரயில்' இயக்கும் வகையில் வடிவமைக்க, 'மெட்ரோ ரயில்' நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கோவை - அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் - கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்டப்படுகிறது. நவஇந்தியா, ஹோப் காலேஜ், கோல்டுவின்ஸ் ஆகிய மூன்று இடங்களில் வேலைகள் நடந்து வருகின்றன. இதில், நவஇந்தியா பகுதியை கடக்கும் உயரழுத்த மின் கம்பியை, புதை மின் வடமாக கொண்டு செல்வதற்கான பணிகள் நடக்கின்றன. ஹோப் காலேஜ் பகுதியில், 52 மீட்டர் நீளத்துக்கு இரும்பு கர்டர் அமைக்க வேண்டும். அதன் தரத்தை, லக்னோ தரப்பரிசோதனை குழு ஆய்வு செய்ய இருக்கிறது.
கோல்டுவின்ஸ் பகுதியில் 'ரேம்ப்' அமைக்கும் பணி துரிதகதியில் நடந்து வருகிறது; தற்போது தார் ரோடு போடப்படுகிறது. மையத்தடுப்பு மற்றும் பக்கவாட்டுச் சுவர்கள் அடுத்தடுத்து அமைக்கப்படும். இப்பாலத்தை நீலாம்பூர் வரை நீட்டிக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது; உத்தேசமாக, 700 கோடி ரூபாய் செலவாகலாம் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
மெட்ரோ பாதை
இச்சூழலில், மெட்ரோ ரயில் நிறுவனமும் அவிநாசி ரோட்டில் நீலாம்பூர் வரை மெட்ரோ வழித்தடம் அமைக்க இருக்கிறது. கோல்டுவின்ஸ் வரை மேம்பாலம் கட்டப்பட்டு விட்டதால், உப்பிலிபாளையத்தில் இருந்து வரும்போது இடதுபுறத்தில் மெட்ரோ பாதை அமைய இருக்கிறது. கோல்டுவின்ஸ் முதல் நீலாம்பூர் வரை இப்பாதை அமைக்க நிலம் கையகப்படுத்தும் செலவை சுருக்க, ஒரே துாணில் முதல் அடுக்கில் கார், பைக், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் வகையில் மேம்பாலம், இரண்டாவது அடுக்கில் 'மெட்ரோ ரயில்' இயக்கும் வகையில் 'டபுள் டக்கர்' முறையில் அமைக்க, 'மெட்ரோ ரயில்' நிறுவனம் ஆலோசித்திருக்கிறது.
மாநில நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாவது:
உப்பிலிபாளையம் - கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., மேம்பாலப் பணி முடிய இருக்கிறது. இப்பாலத்தில் வருவோர் ஹோல்டுவின்ஸில் இறங்கி, மீண்டும் ஏறும் வகையில் நீலாம்பூர் வரை 5 கி.மீ.,க்கு மேம்பாலம் கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. ஒரே துாணில் கீழே மேம்பாலம், மேலே மெட்ரோ ரயில் செல்லும் வகையில் அமைத்தால் திட்ட செலவு குறையும்; நிலம் கையகப்படுத்தும் செலவும் குறையும். இதற்கான செலவினத்தை 'மெட்ரோ நிறுவனம்' ஏற்பதாக கூறுகிறது.
மாநில நெடுஞ்சாலைத்துறை இப்பணியை செய்து விட்டு, அதற்குரிய தொகையை மெட்ரோ'விடம் பெற்றுக் கொள்ளலாம் அல்லது மெட்ரோ நிறுவனம் செய்துவிட்டு, நமக்கான தொகையை செலுத்தலாம். இப்பணியை நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்வதா அல்லது மெட்ரோ நிறுவனம் மேற்கொள்வதா என்கிற ஆலோசனை நடந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் முடிவு தெரியவரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.