வெயில் அதிகரிப்பதால் மெல்ல சரியும் நிலத்தடி நீர் நீர்வளத்துறை கணக்கெடுப்பில் 6.3 அடி சராசரி பதிவு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெயில் அதிகரித்து வருவதால், நிலத்தடி நீர்மட்டம் மெல்ல சரிய துவங்கியுள்ளது. டிசம்பரில் 5.2 அடியாக இருந்த நீர்மட்டம், ஜனவரி இறுதியில், நீர்வளத்துறை எடுத்த கணக்கெடுப்பில் 6.3 அடியாக குறைந்து பதிவாகியுள்ளது.

தமிழகம் முழுதும் குளிர்காலம் முடியும் நிலையில், இப்போதே வெயில் வாட்டி எடுக்க துவங்கிவிட்டது.

தினமும் இரவில் குளிர் இருந்தாலும், பகலில் கடுமையான வெயில் நிலவுகிறது. இதன் எதிரொலியாக, நீர்நிலைகள் வறண்டு போவதும், நிலத்தடி நீர் மெல்ல சரியும் நிலையும் உருவாகிறது.

அச்சம்



நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவு பெய்தது. இருப்பினும் நீர்நிலைகளில் உள்ள தண்ணீர், வேகமாக குறைந்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 381 ஏரிகளும், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் 380 ஏரிகளும், குளம், குட்டைகள் 2,000 எண்ணிக்கையில் உள்ளன. இதில், 200க்கும் குறைவான ஏரிகள் மட்டுமே, கடந்த நவம்பர், டிசம்பரில் முழுமையாக நிரம்பின.

இதில் உள்ள தண்ணீரை நம்பியே பல இடங்களில், விவசாயிகள் நெல், கரும்பு உள்ளிட்டவை பிடாரிட்டு வருகின்றனர். ஆனால், வெயில் காரணமாக நீர்நிலைகள் வற்றுவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

அதேபோல், நிலத்தடி நீர்மட்டமும் குறைவதால், கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்வளத்துறை எடுத்த கணக்கெடுப்பில், கடந்த நவம்பர் மாதம், மாவட்டத்தில் சராசரி நிலத்தடி நீர்மட்டம், 8.5 அடியாக இருந்தது.

இதையடுத்து, டிசம்பரில் 5.2 அடியாக பதிவாகி உயர்ந்து காணப்பட்டது.

இதையடுத்து, ஜனவரி மாதம் இறுதியில் எடுத்த கணக்கெடுப்பில், 1.1 அடி குறைந்து 6.3 அடியாக பதிவாகியுள்ளது.

முறைகேடு



வாலாஜாபாத், சாலவாக்கம், ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டார பகுதிகளில், ஆழ்துளை கிணறுகள் அமைக்கும்போது, 100 அடிக்கும் குறைவாக நிலத்தடி நீர் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக அப்பகுதியில் வசிப்போர் தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே, உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் போன்ற ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள குக்கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது.

மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 185 கோடி ரூபாய் மதிப்பில், அனைத்து கிராமப்புற வீடுகளுக்கு தேவையான குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன.

ஆனாலும், பல கிராமங்களில் இத்திட்டம் முழுமையாக சென்றடையவில்லை. குடிநீருக்கு, கிராமப்புறங்களில் இன்றைக்கும் கிராமவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் நகர்ப்புறத்திலேயே டேங்கர் லாரி வாயிலாக, பல இடங்களில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகின்றன.

கடுமையான வெயில் இப்போதே நிலவுவதால், குடிநீர் பிரச்னைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். பாலாற்றில் முறைகேடான ஆழ்துளை கிணறுகள் பல இயங்குகிறது.

அவற்றை அகற்றிவிட்டு, அதை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் முறைகேடான மின்மோட்டார்களை பறிமுதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் எழுந்துள்ளன.

கவலை



கடந்தாண்டு போதிய மழை பெய்தபோதும், பல ஏரிகள் வேகமாக வறண்டு வருகின்றன. ஏரிகள் பலவற்றில் ஓரளவு தண்ணீர் இருந்தாலும், ஜூன் மாதம் வரை போதிய தண்ணீர் இருக்குமா என, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, வெப்பநிலையும் அதிகரிப்பதால் குழந்தைகள், முதியோர், அவதிப்படுகின்றனர். தற்போதைய நிலவரப்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், அதிகபட்சமாக 92 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவுகிறது. அடுத்து வரும் நாட்களில், அதிகபட்சமாக 38 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நிலத்தடி நீரை மட்டுமே நம்பி, விவசாயம் மட்டுமல்லாமல், ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள குடிநீர் தொட்டிகள் இயங்கி வருகின்றன. நிலத்தடி நீர்மட்டம் மேலும் குறையும்பட்சத்தில், குடிநீருக்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி வருகிறது.


ஆக்கிரமிப்பு பிடியில் நீர்நிலைகள்: நீர்வள துறை அதிகாரிகள் பாராமுகம்!




காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையின் போது, இயல்பான மழையளவு கிடைத்தாலும், நீர்நிலைகளுக்கு மழைநீர் செல்ல சரியான கட்டமைப்பு இல்லை.கால்வாய், ஓடை, ஏரி வரத்து கால்வாய், போக்கு கால்வாய் என, விவசாய கட்டமைப்புகள் வீணடிக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுதும் 600 ஏக்கருக்கு மேலாக, நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால், விவசாய பணிகள் பாதிப்பதோடு, நிலத்தடி நீரும் உயர வழியில்லாத நிலை உள்ளது.


நிலத்தடி நீரை உயர்த்த, ஆறுகளுக்கு செல்லும் கால்வாய்களையும், ஆறுகளில் இருந்து ஏரி, குளம் செல்லும் கால்வாய் போன்றவைகளையும் சீரமைத்து பராமரிக்க வேண்டும் என்பதே கிராம, நகர மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. ஆனால், அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, தற்போது வரை பல ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன.




நான்கு மாதங்களில் பதிவான@சராசரி நீர்மட்டம்(அடியில்)@



அக்டோபர் 10.5


நவம்பர் 8.5


டிசம்பர் 5.22025


ஜனவரி 6.3

Advertisement