அழுகிய நிலையில் ஓடையில் மிதந்த வாத்துகள்...அட்டூழியம்:ஆந்திர கும்பல் கைவரிசையா? விவசாயிகள் அச்சம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3854209.jpg?width=1000&height=625)
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே நீரோடையில், அழுகிய நிலையில் மிதந்த நுாற்றுக்கணக்கான வாத்துகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நோயால் கொத்து கொத்தாக உயிரிழந்தவற்றை ஆந்திர மாநில கும்பல் வீசி சென்றிருக்கலாம் என கிராம மக்கள் அஞ்சுகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அருகே பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது நாகராஜகண்டிகை கிராமம். அந்த கிராம எல்லையில், கும்மிடிப்பூண்டி -- மாதர்பாக்கம் நெடுஞ்சாலையின் குறுக்கே நீரோடை செல்கிறது. விவசாய பயன்பாட்டில் உள்ள அந்த ஓடையில், நேற்று, 150க்கும் மேற்பட்ட வாத்துகள் அழுகிய நிலையில் செத்து மிதந்தன.
அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசியதால் கிராம மக்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து, முக கவசங்கள், கையுறைகள் அணிந்தபடி அழுகிய நிலையில் இருந்த வாத்துகளை சேகரித்தனர்.
பின் சற்று தொலைவில், ஜே.சி.பி., வாயிலாக குழி தோண்டி புதைத்தனர். நீரோடை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை துறையினர், ஒரு வாத்தின் உடலை பரிசோதனை செய்ய, சென்னை, மாதவரத்தில் உள்ள மத்திய பல்கலைகழக ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து நாகராஜகண்டிகை கிராம மக்கள் கூறுகையில், ‛வாத்து வளர்ப்பவர்கள், இப்பகுதியில் கிடையாது. ஆந்திராவில் நோயால் உயிரிழந்த வாத்துகளை, வாகனத்தில் ஏற்றி வந்து, சாலையோரம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள நீரோடையில் கொட்டி இருக்கலாம்' என்றனர்.
கும்மிடிப்பூண்டி பி.டி.ஓ., அமிழ்தமன்னன் கூறுகையில், ‛'இரு தினங்களுக்கு முன் இரவு நேரத்தில், சரக்கு வாகனம் ஒன்றில் வந்தவர்கள், இறந்த வாத்துகளை ஓடையில் கொட்டி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம்,'' என்றார்.
தமிழக பகுதி நீரோடையில் குவிக்கப்பட்ட இறந்த வாத்துகள், பறவை காய்ச்சல் நோயால் இறந்துள்ளதா அல்லது ஆந்திராவில் உயிரிழந்த வாத்துகளாக என தெரியவில்லை. அருகில் உள்ள தொழிற்சாலையின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆரம்பாக்கம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.