கவரப்பேட்டை விபத்து: பெரும் அசம்பாவிதம் தவிர்த்த ரயில் ஓட்டுநருக்கு பாராட்டு
சென்னை:கவரைப்பேட்டை விபத்தின்போது, சிறப்பாக செயல்பட்டு, பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்த ரயில் ஓட்டுநர் சுப்பிரமணிக்கு, ரயில்வே வாரியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து பீஹார் மாநிலம், தர்பங்காவுக்கு கடந்த ஆண்டு அக்., 11ல், பாக்மதி அதிவிரைவு ரயில் சென்றது. திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே செல்லும்போது, பிரதான பாதைக்கு பதிலாக லுாப் லைன் எனப்படும், கிளை பாதையில் மாறி, அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது.
அந்த ரயிலின் 13 பெட்டிகள் தடம்புரண்டதில், 19 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய, தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி, ரயில்வே வாரியத்திடம், முதல்கட்ட அறிக்கை சமர்பித்திருந்தார்.
இதுகுறித்து, ரயில்வே வாரியம், தெற்கு ரயில்வேக்கு அனுப்பியுள்ள கடிதம்:
பாக்மதி அதிவிரைவு ரயில் கவரைப்பேட்டை அருகே நடந்த விபத்தின்போது, அதன் ஓட்டுநர் சுப்பிரமணி, துரிதமாக செயல்பட்டு, அவசரகால பிரேக்கை பயன்படுத்தி உள்ளார். இதனால், ரயிலின் வேகம் படிப்படியாக குறைந்து சென்று, காலியாக நின்றுக் கொண்டிருந்த சரக்கு ரயில் பெட்டியில் மோதியது. இதனால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. அவரது பணி பாராட்டுதக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.