மாநிலங்கள் பயன்படுத்தாமல் தேங்கியுள்ள ரூ.1.54 லட்சம் கோடி! மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் மெத்தனம்

புதுடில்லி : மத்திய அரசு செயல்படுத்தும், 50க்கும் மேற்பட்ட திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்ட, 2.46 லட்சம் கோடி ரூபாய் நிதியில், 62 சதவீதம் அதாவது, 1.54 லட்சம் கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல் தேங்கியுள்ளது. இதை முழுமையாக பயன்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பிரதமர் ஆவாஸ் யோஜனா, ஜல் ஜீவன் திட்டம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் உட்பட பல திட்டங்களை செயல்படுத்துவதற்கு, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி வழங்குகிறது. இது போன்ற நிதியை ஒதுக்குவது, பயன்படுத்துவது போன்றவற்றுக்காக, எஸ்.என்.ஏ., எனப்படும் நோடல் ஏஜன்சி என்ற ஒருங்கிணைப்பு அமைப்பை மாநில அரசுகள் அடையாளம் காட்டுகின்றன. இவற்றின் பெயரில், வங்கிகளில் தனிக் கணக்கு துவக்கப்பட்டு, அதற்கு, மத்திய அரசு நிதியை அனுப்பி வைக்கும்.
இவ்வாறு வழங்கப்படும் நிதி பயன்படுத்தப்படுவது தொடர்பாக, மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. முதல் முறையாக இது குறித்த தகவல், 2025 - 2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, 500 கோடி ரூபாய்க்கு மேல், நோடல் ஏஜன்சிகளில் தேங்கியுள்ள விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதில், 50 முக்கிய திட்டங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, மத்திய அரசு ஒதுக்கியுள்ள, 2.46 லட்சம் கோடி ரூபாயில், கடந்தாண்டு டிச., 31ம் தேதி நிலவரப்படி, 62 சதவீதம், அதாவது, 1.54 லட்சம் கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல், மாநிலங்களின் கணக்கில் உள்ளது. இதில், பிரதமர் ஆவாஸ் யோஜனா - கிராமின் எனப்படும் கிராமங்களில் வீட்டு வசதி திட்டம், ஜல் ஜீவன் திட்டம், அம்ருத் எனப்படும் 500 நகர்ப்புற நகரங்களில் புத்துயிரூட்டும் திட்டம், அங்கன்வாடி மற்றும் போஷாக்கு திட்டம்.
ஸ்வச் பாரத் எனப்படும் துாய்மை இந்தியா இயக்கம் ஆகிய ஐந்து முக்கிய திட்டங்களில் மட்டும், 1 லட்சம் கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதாவது மாநிலங்களில் பயன்படுத்தப்படாமல் உள்ள நிதியில், 45 சதவீதம் இந்த திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டவை.
இது குறித்து மத்திய நிதித் துறை உயரதிகாரிகள் கூறியதாவது: வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களுக்காக, மத்திய, மாநில அரசுகள் கடன் வாங்க வேண்டிய நிலையில் உள்ளன. இந்நிலையில், திட்டங்களை செயல்படுத்தாமல் நிதி தேங்கியுள்ளது, தேவையில்லாமல் அதிக வட்டியை செலுத்த வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. இதைத் தடுக்கும் வகையில், மாநிலங்களின் நோடல் ஏஜன்சிகளிடம் தேங்கியுள்ள தொகை தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் அமைச்சகங்கள் மற்றும் துறைகள், அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து இந்தத் தொகையை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது தொடர்பான ஆய்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாக திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைவதுடன், அதன் பலன்களும் மக்களுக்கு கிடைக்கும். நிதியில்லை என்பதற்காக எந்த ஒரு திட்டமும் நிறுத்தப்படுவதில்லை. அதே நேரத்தில் உரிய நிதி ஒதுக்கியும், அதை மாநிலங்கள் முறையாக செலவிடாதது, திட்டத்தின் நோக்கத்தை குலைத்துவிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.










மேலும்
-
ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மறியலுக்கு அனுமதி மறுப்பு
-
விவசாயி தெரிவித்த குறையை உடனடியாக தீர்த்த கலெக்டர்
-
ஆறுவழி சாலையில் பால பணி தீவிரம்
-
'கலைஞர் கனவு இல்லம்' திட்ட கம்பிகள் துருப்பிடித்து நாசம்
-
210 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதற்கு திருவாலங்காடில் 1,000 மரக்கன்றுகள் நட திட்டம்
-
சினிமா இயக்குநர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்து முடக்கம்