ஆடுகளை வேட்டையாடிய நாய்கள்; சாலை மறியல் செய்து விவசாயிகள் ஆவேசம்

திருப்பூர்; 'தெரு நாய்களால் ஆடுகள் கடிபட்டு இறக்கும் சம்பவம் இனியும், தொடர் கதையாகும் பட்சத்தில், சாலை மறியல் செய்து, தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்டுவோம்' என விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட இடங்களில் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை, சுற்றித்திரியும் நாய்கள் கடிக்கின்றன. இதனால், ஆடுகள் இறக்கின்றன.
இதுவரை, நுாற்றுக் கணக்கான ஆடுகள் பலியாகியுள்ளன. கால்நடை வளர்ப்பை மட்டுமே நம்பியுள்ளவர்களுக்கு, இது பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்துகிறது; 'வாழ்வாதாரம் சார்ந்த பிரச்னையாக இது உருவெடுத்துள்ளதால், இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என, விவசாயிகள் கூறி வருகின்றனர்.
'இழப்பீடு வழங்க அரசாணை பெறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது,' என, 'கீறல் விழுந்த ரெக்கார்டு' போன்று வருவாய்த் துறையினரும் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி, விவசாயிகளை சமாதானப்படுத்தி வருகின்றனர். பொறுமையிழந்த விவசாயிகள், இழப்பீடு விவகாரத்தில் அதிகாரிகளின் போக்கில் நம்பிக்கை இழந்துள்ளனர். இனி, நாய்களால் ஆடுகள் கடிபடும் நிலை ஏற்பட்டால், சாலை மறியல் செய்து, தங்களின் எதிர்ப்பை பதிவு செய்வதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
அதற்கேற்ப நேற்று முன்தினம், காங்கயம் - சிவன்மலை அருகே கோவில்பாளையம் பகுதியில், செல்வராஜ் என்பவரது, 3 ஆடுகளை நாய் கடித்ததில், 2 ஆடுகள் இறந்தன. சென்னிலை ராமலிங்கபுரத்தில், நல்லசிவம் என்பவருக்கு சொந்தமான, 20 ஆடுகள், நாய் கடித்ததில் இறந்தன. இதனால், ராமலிங்கபுரம் பஸ் நிலையத்தில், இறந்த ஆடுகளை ரோட்டில் போட்டு, சென்னிமலை - ஊத்துக்குளி ரோட்டில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சமாதானம் செய்து மறியலை கைவிடச் செய்தனர்.
விவசாயி வேலுசாமி கூறியதாவது: இறக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு தொடர்பான கோரிக்கையை, அறவழியில் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.
அரசு இயந்திரங்களுடன் இணைந்தே, செயல்பட்டு வருகிறோம். துவக்கத்தில், 45 நாளில் இழப்பீடு பெற்றுத்தரப்படும் என, உறுதியளித்தனர். அதன்பின், 20 நாளில், இழப்பீடு பெற்றுத்தரப்படும் எனவும், பின், 2 நாளில் இழப்பீடு தொடர்பான அரசாணை பெறப்படும் என வருவாய்த்துறையினர் உறுதியளித்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், போராட்டத்தை வலுப்படுத்தும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.