திடக்கழிவு மேலாண்மையில் 6.27 கோடி ரூபாய் இழப்பு தணிக்கை அறிக்கையில் விளாசல்
புதுச்சேரி: திட கழிவு மேலாண்மையில் புதுச்சேரி அரசுக்கு 6.27 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என தணிக்கை அறிக்கை சுட்டிகாட்டியுள்ளது.
புதுச்சேரி சட்டசபையில் நேற்றுமுன்தினம் நகர்புறங்களில் திட கழிவு மேலாண்மை குறித்த செயலாக்க தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் முக்கிய அம்சங்கள்;
புதுச்சேரி யூனிய ன்பிரதேசத்தில் திட கழிவு மேலாண்மை முறையாக கடைபிடிப்பதற்கான குறுகிய கால அல்லது நீண்ட கால திட்டங்களை உள்ளாட்சி துறை மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தயாரிக்கவில்லை. கழிவு உற்பத்தியில் அளவை மதிப்பீடுவதற்கு எந்த ஒரு கணக்கெடுப்பையும் நடத்தவில்லை. உழவர்கரை நகராட்சியை தவிர்த்து மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் வீடு வீடாக சென்று கழிவுகளை சேகரிக்க முறைசாரா பிரிவினை கண்டறிந்து பதிவு செய்யவில்லை.
தேவையான திட்டங்கள் இறுதி செய்யப்படாததால் துாய்மை இந்தியா இயக்கத்தில் கீழ் ரூ.6.37 கோடிக்கான மத்திய அரசின் நிதியை பெறும் வாய்ப்பை புதுச்சேரி துறக்க நேரிட்டது.
புதுச்சேரியில் ஐந்தில் மூன்று நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், குடியிருப்பு, வணிக நிறுவனங்கள் ஆரம்ப நிலையில் வீடு வீடாக சென்று கழிவுகளை சேகரிக்கும்போதே பிரிக்கும் முறை இல்லை.
உயிரி அகழ்வு முறை மூலம் நிலத்தை மீட்டெடுப்பதில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரருக்கு 2,23,841 டன் மரபு கழிவுகளை பதப்படுத்துவதற்கும் நிலத்தை சீரமைப்பதற்கும் ரூ.12.27 கோடி வழங்கப்பட்டது. இருந்தாலும் ஒப்பந்ததாரர் 77,916 டன் மரபு வழி கழிவுகளை மட்டுமே அகற்றினார். விகிதாசாரப்படி நிலத்தை மறுசீரமைக்காததால் ரூ.6.27 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டது.
திட கழிவு மேலாண்மை விதிகளுக்கு இயங்காததால் ஏப்ரல் 2020 முதல் டிசம்பர் 2022 வரை சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.96 லட்சத்தை தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்தது.
இவ்வாறு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.