பெங்களூரு மனோஜ் பண்டகே ஐ.பி.எல்.,லில் ஜொலிப்பாரா?

கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் 18வது ஐ.பி.எல்., போட்டிகள், நம் நாட்டின் பல பகுதிகளில் அடுத்த மாதம் 21ம் தேதி துவங்கி மே 25ம் தேதி வரை நடக்க உள்ளன.
போட்டிகளில் பங்கேற்கும் அணிகளின் வீரர்கள், தற்போது இருந்து பயிற்சியை துவங்கி உள்ளனர். இதுவரை 17 ஐ.பி.எல்., தொடர்கள் நடந்து இருந்தாலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒருபோதும் கோப்பையை கைப்பற்றியது இல்லை.
இத்தனைக்கும் அந்த அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி உட்பட பலர் உள்ளனர். இம்முறையாவது கோப்பையை தட்டி துாக்க வேண்டும் என்ற முனைப்பில் அந்த அணி களம் இறங்க உள்ளது.
இம்முறை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் உள்ளார். அவர் இளம் வீரர்களை அதிகம் ஊக்குவிக்க கூடியவர். அதன்படி பார்த்தால், அணியில் இடம் பெற்றுள்ள கர்நாடகாவின் ராய்ச்சூரைச் சேர்ந்த, இடதுகை பேட்ஸ்மேன் மனோஜ் பண்டகேவுக்கு வாய்ப்பு அதிகம் கிடைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
கர்நாடக அணிக்காக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் மனோஜ், கடந்த 2023, 2024ம் ஆண்டுகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பிடித்தார். ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த தொடரில் வாய்ப்பு கிடைத்தால் அசத்த காத்திருக்கிறார்.
குறைந்த பந்துகளை எதிர்கொண்டு அதிக ரன்கள் குவிப்பதில் மனோஜ் கைதேர்ந்தவர். பந்து வீச்சிலும் ஓரளவுக்கு கை கொடுக்கக்கூடியவர். இதனால், இம்முறை அவருக்கு அதிர்ஷ்ட கதவு திறக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது
-- நமது நிருபர் --
.