கார்வாரில் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் இழுபறி

கார்வாரின் சித்தாகுலா கிராமத்தின் அருகில், கிரிக்கெட் மைதானம் கட்ட, கே.எஸ்.சி.ஏ.,க்கு ஒப்பந்த அடிப்படையில் அளிக்கப்பட்ட நிலத்தை, திருப்பி தருவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

உத்தரகன்னடா, கார்வாரின் சித்தாகுலா கிராமத்தின் அருகில், சர்வே எண் 1144ல் உள்ள 11.34 ஏக்கர் அரசு நிலத்தில், கிரிக்கெட் மைதானம் அமைக்க, கே.எஸ்.சி.ஏ., எனும் கர்நாடக ஸ்டேட் கிரிக்கெட் அசோசியேஷன் முடிவு செய்தது.

இந்த நிலத்தை 30 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கி, உத்தர கன்னட மாவட்ட நிர்வாகம், 2018 மார்ச் 14ல் உத்தரவிட்டது. இந்த நிலத்துக்கு ஆண்டு தோறும் 59,250 ரூபாய் செலுத்த கே.எஸ்.சி.ஏ., முன் வந்தது.

விளையாட்டு அரங்கம்



கடந்த 2020 முதல் 2024 வரை ஒப்பந்த தொகையை கே.எஸ்.சி.ஏ., செலுத்தி வந்தது. நிலத்தில் கிரிக்கெட் மைதானம் கட்டுவது குறித்து, 2024 பிப்ரவரி 29ல் மாவட்ட நிர்வாகத்துடன், கே.எஸ்.சி.ஏ., அதிகாரபூர்வமாக ஒப்பந்தம் செய்து கொண்டது.

புதிதாக விளையாட்டு அரங்கம் கட்டினால், விளையாட்டு போட்டிகள் நடத்த வசதியாக இருக்கும்; பயிற்சி பெறவும் உதவியாக இருக்கும் என, கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் 2024 நவம்பர் 4ல், மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் எழுதிய கே.எஸ்.சி.ஏ., 'விளையாட்டு மைதானம் அமைக்க அளிக்கப்பட்ட இடம், பாரம்பரியமிக்க இடமாகும். அந்த இடத்தை பயன்படுத்த முடியாது. கிரிக்கெட் மைதானம் அமைக்க, அந்த இடம் தகுதியானது அல்ல. எனவே ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு, தகுதியான மாற்று இடம் தாருங்கள்' என கோரியுள்ளது.

அனைத்து வசதிகளும் கொண்ட அரசு நிலம் கிடைப்பது கஷ்டம் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. விளையாட்டு வீரர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

12 ஏக்கர் நிலம்



மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:

கே.எஸ்.சி.ஏ., கோரிக்கையின்படி, மாவட்ட நிர்வாகம் மாற்று இடம் தேடி வருகிறது. விளையாட்டு அரங்கம் அமைக்க குறைந்தபட்சம் 12 ஏக்கர் நிலம் வேண்டும். சாலை உட்பட, மற்ற அடிப்படை வசதிகள் இருக்கும் இடத்தையே கொடுக்க வேண்டும்.

ஆனால், தகுதியான அரசு இடம் தற்போதைக்கு கிடைப்பது கஷ்டம். இடம் கிடைத்த பின், கே.எஸ்.சி.ஏ., யிடம் ஒப்படைக்கப்படும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்
- நமது நிருபர் -
.

Advertisement