யானைகள் மிதித்து இருவர் பரிதாப பலி
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3854347.jpg?width=1000&height=625)
பெங்களூரு: ஹாசன் மாவட்டம், பேலுாரின் கனகுப்பே கிராமத்தை சேர்ந்தவர் தியவம்மா, 60. மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகளை அழைத்து வர, அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை என்பதால், குடும்பத்தினர் தேடி சென்றனர்.
அப்போது, புதர் அருகில்தியவம்மா இறந்து கிடந்தார். அவரை யானை தாக்கியதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. உடனடியாக, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு வந்த வனத்துறையினரை பார்த்த குடும்பத்தினரும், கிராமத்தினரும், அவர்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அங்கிருந்து ஆரேஹள்ளி போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டே சரகுருகட்டே ஹாலா கிராமத்தை சேர்ந்தவர் அவினாஷ், 21. நேற்று காலையில் பண்ணைக்கு பணிக்கு சென்றார். அப்போது உணவு தேடி, மூன்று யானைகள் வந்தன. இதை பார்த்த அங்கு பணியாற்றி கொண்டிருந்தோர் ஓடினர். ஆனால், அவினாஷை யானைகள் துரத்தின. கீழே விழுந்தவரை யானைகள் மிதித்து கொன்றன.
அப்போது அங்கிருந்த மற்றவர்களும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அவர்கள், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.