ஜெயித்த காளைகளுக்கு 'புல்லட்' குதிரைகளுக்கு 'ஹோண்டா பைக்'

அதானி தாலுகாவின், சந்திரப்பவாடி மைதானத்தில் நடந்த காளை, குதிரை வண்டி ஓட்ட பந்தயத்தில், பலரின் மாடுகள் பங்கேற்று பரிசுகளை தட்டி சென்றன.

பெலகாவி மாவட்டம், அதானி தாலுகாவின் சந்திரப்பவாடி மைதானத்தில் நேற்று முன்தினம், காளைகள், குதிரை வண்டி பந்தயம் நடந்தது.

முன்னாள் அமைச்சர் ஸ்ரீமந்த் பாட்டீலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, இப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் 111 இரட்டை காளைகள், 12 இரட்டை குதிரைகள் போட்டியில் பங்கேற்றன.

கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிராவை சேர்ந்த பலரும், தங்களின் காளைகள், குதிரைகளுடன் வந்து, போட்டியில் பங்கேற்றனர்.

இரட்டை காளைகள் மின்னல் வேகத்தில் ஓடின. அங்கு கூடியிருந்த பல ஆயிரக்கணக்கானமக்கள் கை தட்டியும், விசில் அடித்தும் மாடுகளை ஊக்கப்படுத்தினர்.

பாளு பஜாரே என்பவருக்கு சொந்தமான, 'ஹெலிகாப்டர் பைஜா, சங் கோலா ராஜா' என்ற பெயர் கொண்ட இரட்டை காளைகள் ஓட்ட பந்தயத்தில் வெற்றி பெற்றன. முதல் பரிசாக, இரண்டு புல்லட் பைக்குகள் வழங்கப்பட்டன.

பீலவடி பாட்டீல்என்பவரின் காளை இரண்டாவது பரிசு பெற்றது; இரண்டு ஹோண்டா ஷைன் பைக்குகள் பரிசாக கிடைத்தன. ஜங்கமா என்பவரின் இரட்டை காளை, மூன்றாவது இடத்தை பெற்று, இரண்டு ஹெச்.எப்., டீலக்ஸ் பைக்குகளை பரிசாக வென்றன.


மற்ற காளைகள், குதிரைகளுக்கு தலா 15 லட்சம் ரூபாய் பரிசளித்து, கவுரவிக்கப்பட்டன. போட்டியை காண, பல்வேறு நகரங்களில் இருந்து மக்கள் வந்திருந்தனர்

- நமது நிருபர் -.

Advertisement