வாடகைக்கு இயங்கிய 12 கார்கள் ஆர்.டி.ஓ., அதிகாரிகள் பறிமுதல்

பெங்களூரு: வர்த்தக நோக்கத்துக்கு பயன்படுத்தப்பட்ட 12 கார்களை ஆர்.டி.ஓ.,அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து, ஆர்.டி.ஓ, அதிகாரிகள் கூறியதாவது:

சொந்த பயன்பாட்டுக்கு வைத்துள்ள கார்களுக்கு ஒயிட் போர்டும்; வர்த்தக நோக்கத்துக்கு பயன்படுத்தும் கார்களுக்கு மஞ்சள் போர்டும் பொருத்துவது கட்டாயம். ஆனால் பலரும், மோட்டார் வாகன சட்டத்தை மீறி, ஒயிட் போர்டு வாகனங்களை வர்த்தக நோக்கத்துக்கு பயன்படுத்துகின்றனர்.

வாடகை பணத்துக்காக,'ஜூம் ஆப்'பில் கார்களை இணைத்து, சட்டவிரோத மாக வர்த்தக நோக்கத்துக்குபயன்படுத்துகின்றனர். இதுபோன்று வாடகைக்கு பெறப்படும் கார்களில், போதை மருந்து கடத்துவது உட்பட சமூகவிரோத செயல்கள் நடக்க வாய்ப்பு அதிகம். எனவே இத்தகைய, 'ஆப்'களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பெங்களூரில் ஜூம் கார் நிறுவனம் மத்திய அலுவலகம் வைத்துள்ளது.

இந்நிறுவனத்தின்உரிமம், பல ஆண்டுகளுக்கு முன்பே ரத்து செய்யப்பட்டது. இப்போது இதே நிறுவனம், 'ஜூம் ஆப்' வடிவமைத்து செயல்படுத்தி உள்ளது.

பெங்களூரில் மொத்தம் 25 கிளைகள் வைத்துள்ளது. ஒவ்வொரு கிளையிலும் தலா 50 கார்களை இணைத்து, வர்த்தக நோக்கத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆதார் எண்,ஓட்டுனர் உரிமத்தை அளித்து கார் புக்கிங் செய்தால், நான்கு மணி நேரத்துக்கு 2,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

சொந்த பயன்பாட்டுக்கு வாங்கிய ஒயிட்போர்டு காரை, டாக்சியாக வாடகைக்கு ஓட்ட கூடாது. ஜூம் ஆப் நிறுவனத்தினர் ஒயிட் போர்டு கார்களை, விதிமீறலாக அட்டாச் செய்து கொண்டு, உரிமையாளர்களுக்கு வாடகை கொடுக்கின்றன.

விதிமீறலாக வாகனங்கள் இயங்குவது குறித்து, போக்குவரத்து துறைக்கு பல புகார்கள் வந்துள்ளன.

எனவே போக்குவரத்து துறை அதிகாரி கிருஷ்ணானந்தா தலைமையிலான குழுவினர், வாடிக்கையாளர்கள் போன்று, 'ஜூம் ஆப்'பில், 2,000 ரூபாய் செலுத்தி கார்களை புக் செய்து, 12 கார்களை பறிமுதல் செய்தனர். இவற்றில் மேற்கு வங்கத்தில் பதிவு செய்யப்பட்ட காரும் உள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர், தங்கள் கார்களை இந்த, 'ஆப்' பில், அட்டாச் செய்துள்ளனர். சனி, ஞாயிற்று கிழமைகளில் மட்டும், கார்களை பயன்படுத்துகின்றனர்.

மற்ற நாட்களில் வாடகைக்கு விடுகின்றனர். இவர்களின் கார்கள், சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தினால், சிக்குவது கார் உரிமையாளர்கள் தான். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள்கூறினர்.

Advertisement