சாம்ராஜ் நகரில் அமைச்சரவை கூட்டம் மூன்றாவது முறையாக தள்ளிவைப்பு
பெங்களூரு: சாம்ராஜ்நகர் மலை மஹாதேஸ்வராவில் நடக்கவிருந்த அமைச்சரவை கூட்டம், மூன்றாவது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் சங்கத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
முதல்வராக இருப்பவர்கள், சாம்ராஜ் நகர் சென்றால், பதவி பறிபோகும் என்ற மூட நம்பிக்கை பல ஆண்டுகளாகவே இருந்தது.
இதை முறியடித்து, 2013 - 18ல் முதல்வராக இருந்த சித்தராமையா பலமுறை அங்கு சென்றார். 2018 தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்தாலும், 2023ல் மீண்டும் முதல்வராகி விட்டார்.
இம்முறை இம்மாவட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பாக பிப்ரவரி 13, 14ம் தேதிகளில் இங்கு அமைச்சரவை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், அதே கால கட்டத்தில் பெங்களூரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்ததால், அமைச்சரவை கூட்டத்தை, பிப்., 16, 17 ல் நடத்த தேதி நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, முதல்வர் சித்தராமையாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், மூன்றாவது முறையாக மார்ச் 8, 9 ல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மாவட்ட கலெக்டர் ஷில்பா நாக் கூறியதாவது:
முதல்வர் சித்தராமையாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதால், அமைச்சரவை கூட்டம் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. இம்முறை மாவட்ட பொறுப்பு வகிக்கும் கால்நடை துறை அமைச்சர் வெங்கடேஷ், முதல்வரை சந்தித்து, தேதி இறுதி செய்துள்ளார். அதன்படி, மார்ச் 8ல் கருத்தரங்கம், 9ல் அமைச்சரவை கூட்டம் நடத்தப்படும்.
இதற்கான பணிகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் பாக்யராஜ் கூறியதாவது:
மாவட்ட வளர்ச்சிக்காக, மலை மஹாதேஸ்வரா மலையில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்படும் என்று அரசு தீர்மானித்தது. ஆன்மிக தலமான இப்பகுதியில் குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் இன்றி பக்தர்கள் தவிக்கின்றனர். கூட்டம் நடப்பதால், மாவட்ட வளர்ச்சிக்காக சிறப்பு பேக்கேஜ் அறிவிப்பார் என்று எதிர்பார்த்தோம்.
மூன்றாவது முறையாக அமைச்சரவை கூட்ட தேதி மாற்றப்பட்டு உள்ளது வருத்தம் அளிக்கிறது. ஒருவேளை அரசிடம் நிதி இல்லாததால், தள்ளி வைக்கிறதோ என்று சந்தேகம் எழுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
தேசிய நெடுஞ்சாலையில் நடமாடும் கடைகளால் ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெருக்கடி
-
ரூ.20.80 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
-
ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லறை விற்பனை அதிகரிப்பு
-
வேங்கையை கொன்ற வீரன்; வேங்கையூர் வரலாறு கூறும் கல்வெட்டு
-
டாக்டர் பாலியல் பலாத்காரம்; சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை
-
பெண்ணை கொன்ற மகன்கள்; கணவருக்கும் 'காப்பு'