திண்டுக்கல் மாவட்டத்தில் 12 போலி டாக்டர்கள்

திண்டுக்கல்: ''திண்டுக்கல் மாவட்டத்தில் 2024ல் மட்டும் 12 போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ''திண்டுக்கல் மாவட்ட மருத்துவம் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ஆர். பூமிநாதன் தெரிவித்தார்.

அரசு மருத்துவமனைகள் செயல்பாடு ...



நத்தம், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழநி, கொடைக்கானல் உள்ளிட்ட மாவட்டம்முழு வதும் 12 அரசு மருத்துவமனைகள் மக்கள் பயன்பாட்டில் இருக்கிறது. தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். எந்த குறைபாடுகளும் இல்லாமல் சிறப்பாக வழிநடத்தப்படுகிறது.

அடிக்கடி ஆய்வுகளும் நடத்தப்படுகின்றன.

தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு செய்கிறீர்களா...



மாவட்டம் முழுவதும் 180 தனியார் மருத்துவமனைகள் செயல்படுகிறது. ஒவ்வொரு நாளும் குழுவாக சென்று தனியார் மருத்துவமனைகளில் ஆய்வுகள் நடத்துகிறோம். முறையாக பொது மக்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறதா, விபத்துக்களை கட்டுப்படுத்தும் உபகரணங்கள் செயல்பாட்டில் உள்ளதா எனவும் ஆய்வுகள் நடத்தப்படுகிறது. இதுவரை எந்த குளறுபடிகளும் இல்லை. குறைகள் எதுவும் இருந்தால் உடனே அதை சரி செய்ய உத்தரவிடுகிறோம்.

பல அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் இல்லையே...



12 அரசு மருத்துவமனைகளில் 60 சதவீத டாக்டர்கள் உள்ளனர். 40 சதவீதம் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது.தற்போது டாக்டர்கள் பணிக்கான கவுன்சில் நடக்கிறது. விரைவில் காலிப்பணியிடங்கள் உடனே நிரப்புவதற்கான நடவடிக்கையும் நடக்கிறது.

அரசு மருத்துவமனை கட்டடங்கள் சேதமாக உள்ளதே...



சேதமான கட்டடங்களை கண்டறிந்து அதை சரி செய்வதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது எந்த அரசு மருத்துவமனை கட்டடங்களும் சேதமாக இல்லை. அனைத்திலும் நல்ல முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

போலி டாக்டர்கள் அதிகம் நடமாடுகிறார்களே...



போலி டாக்டர்கள் குறித்து வரக்கூடிய புகார்களுக்கு அடிக்கடி ஆய்வு செய்து போலீசாருடன் இணைந்து சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம். 2024 ல் மட்டும் திண்டுக்கல் மாவட்டத்தில் 12 போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் யாரேனும் புகார் கொடுத்தால் அதனடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தொற்றுகள் பரவுகிறதா...



டெங்கு, உன்னிக்காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் கட்டுக்குள் இருக்கிறது. தற்போது காய்ச்சல் பாதிப்புகளும் குறைந்துள்ளது. மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

காலாவதி மருந்துகள் விற்பனை நடக்கிறதா...



இதுகுறித்த புகார்கள் வந்ததன் அடிப்படையில் சில மெடிக்கல்களில் மருத்து இன்ஸ்பெக்டர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. இருந்தபோதிலும் எந்த மெடிக்கல்களிலும் காலாவதியான மருந்துகள் இல்லை. எல்லா அரசு மருத்துவமனைகளிலும் தேவையான மருந்துகள் உள்ளன என்றார்.

Advertisement