ரூ.3,600 கோடி ஹெலிகாப்டர் ஊழல்: புரோக்கருக்கு ஜாமின்

புதுடில்லி : வி.வி.ஐ.பி.,க்களுக்கான ஹெலிகாப்டர் வாங்கும் 3,600 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் நடந்த ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரிட்டனைச் சேர்ந்த இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல்ஜேம்சுக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமின் வழங்கியது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், கடந்த 2010ல், வி.வி.ஐ.பி.,க்களுக்கு 12 ஹெலிகாப்டர்கள் வாங்க அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் போட்டது.
இதில், 423 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக 2013ல் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்கு பதிந்து பலரை கைது செய்தனர். அடுத்து அமைந்த பா.ஜ., அரசு அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
மேலும், அந்நிறுவனம் சார்பில் இடைத்தரகராக செயல்பட்ட பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் மீதும், சி.பி.ஐ., 2016ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
துபாயில் தங்கியிருந்த மைக்கேல், மத்திய அரசின் முயற்சியால் கடந்த 2018 டிசம்பரில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆறு ஆண்டுகளாக சிறையில் இருந்த அவருக்கு டில்லி உயர் நீதிமன்றம் தொடர்ந்து ஜாமின் மறுத்து வந்தது.
இந்நிலையில், ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் விக்ராம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா, மைக்கேல் ஆறு ஆண்டுகளாக சிறையில் இருப்பதாலும், விசாரணை இன்னமும் முடிவடையாததாலும், ஜாமின் வழங்கி நேற்று உத்தரவிட்டனர்.










