புதுச்சேரி பல்கலை பதிவாளரை விடுவித்த உத்தரவு ரத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை"சட்ட விதிகளுக்கு மாறாக, புதுச்சேரி பல்கலை பதிவாளரை பதவியில் இருந்து விடுவித்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி பல்கலையில் காலியாக இருந்த பதிவாளர், நிதி அலுவலர், தேர்வு கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட பணியிடங்களை நேரடி நியமனம் அல்லது அயல் பணி அடிப்படையில் நியமிக்க, 2017 டிசம்பர், 15ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கவுன்சில்



தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரி முதல்வராக பணிபுரிந்த டாக்டர் சசிகாந்த தாஸ், இப்பல்கலையின் பதிவாளராக தேர்வு செய்யப்பட்டு, 2018 ஜூலை 5 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார்.

பல்கலை நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 2019 பிப்., 20ல், அவரை பதிவாளர் பணியில் இருந்து விடுவித்து, பல்கலை நிர்வாகம் உத்தரவிட்டது.

அவர் மீண்டும் தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரி முதல்வராக நியமிக்கப்பட்டார். பின், காலியாக உள்ள பதிவாளர் பதவியை நிரப்பும் வகையில், 2020 செப்டம்பர், 8ல், மீண்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தன்னை பதிவாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்தும், பதிவாளர் பணியிடத்தை நிரப்ப புதிதாக வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், சசிகாந்த தாஸ் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நிர்வாக கவுன்சிலின் முடிவை உறுதி செய்தார்.

மேலும், சசிகாந்த தாசுக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட கருத்துகளை, பணி பதிவேட்டில் இருந்து நீக்கவும் உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, சசிகாந்த தாஸ் மேல்முறையீடு செய்தார். இந்த மனு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு ஆகியோர் ஆஜராகினர்.

நேரடி நியமனம்



அப்போது, 'பல்கலை சட்ட விதிகளின்படி, ஒரு பணியாளரை பணி நீக்கம் செய்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன், எழுத்துப்பூர்வமாக நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும்.

'ஆனால், மனுதாரரை பதிவாளர் பதவியில் இருந்து விடுவிக்கும் முன், அதுபோல எந்த நோட்டீசும் பிறப்பிக்கவில்லை.

'அயல்பணி அடிப்படையில், பதிவாளராக நியமிக்கப்பட்ட மத்திய அரசு பணியாளரான மனுதாரரை, இஷ்டம் போல பதவி நீக்கம் செய்ய முடியாது. அவ்வாறு செய்த நிர்வாக கவுன்சிலின் முடிவு சட்ட விதிகளுக்கு எதிரானது' என, வாதிட்டனர்.

புதுச்சேரி பல்கலை தரப்பில் வழக்கறிஞர் எம்.ரவி ஆஜராகி, ''நேரடி நியமனம் மூலமாகவே பதிவாளராக நியமிக்கப்பட்டார். அவர் அயல்பணி அடிப்படையில் நியமிக்கப்படவில்லை.

''அவரது விண்ணப்பத்திலும் அதுகுறித்து குறிப்பிடவில்லை. அதற்கான ஒப்புதலையும் பெறவில்லை. அவரின் பணி செயல்பாடு திருப்தி இல்லாததால், பணியில் இருந்து விடுவிக்க நிர்வாக கவுன்சில் முடிவு செய்துள்ளது,'' என்றார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வாகி, 1999ல் வடமாநிலங்களில் விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

விசாரணை



பின், அவர் புதுச்சேரியில் உள்ள தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரி முதல்வராக நியமிக்கப்பட்டு உள்ளார். அதன்பின், புதுச்சேரி பல்கலையின் பதிவாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

மத்திய அரசு பணியில் உள்ள மனுதாரரை, பதிவாளர் பணியிலிருந்து விடுவிக்கும் முன், அவர் தரப்பு விளக்கத்தை அளிக்க நியாயமான வாய்ப்பை வழங்கவில்லை.

பணி செயல்பாடு குறித்த குற்றச்சாட்டு பற்றி, முறையான விசாரணை நடத்தாமல், அவரை விடுவித்துள்ளனர்.

இது, அரசியலமைப்பின் விதிகளை மீறுவதாகும். எனவே, பதிவாளர் பதவியில் இருந்த விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

பதிவாளர் பணிக்கு புதிதாக அறிவிப்பு வெளியிட்டும், இதுவரை அந்த பதவி காலியாக உள்ளது.

அசல் நியமன உத்தரவின்படி, தன் பதவி காலத்தை மனுதாரரை முடிக்க அனுமதிப்பதா அல்லது சட்ட விதிகள்படி நடவடிக்கைகளை மேற்கொண்டு, இது தொடர்பாக புதிய முடிவை எடுப்பதா என்பது குறித்து, பல்கலை முடிவு செய்ய வேண்டும்.

உரிய சட்டவிதிகளுக்கு உட்பட்டு, பணி நீக்கம் செய்யப்படவில்லை என்பதால், மனுதாரரை நான்கு வார காலத்துக்குள் மீண்டும் பல்கலை பதிவாளர் பதவியை ஏற்கும் வகையில், அரசு கல்லுாரியில் இருந்து விடுவித்து, தகுந்த உத்தரவை பல்கலை நிர்வாகம் பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement