தமிழக அரசியலில் அனலை கிளப்பிய தர்மேந்திர பிரதான் 28ல் சென்னை வருகிறார்

சென்னை,:பல்கலை துணை வேந்தர்கள் நியமனத்திற்கு புதிய விதிகள் உருவாக்கம், மும்மொழி கொள்கையில் கண்டிப்பு என, தமிழக அரசியலில் திடீர் சூட்டை கிளப்பியுள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், வரும் 28ம் தேதி சென்னை ஐ.ஐ.டி., வரவுள்ளார்.
இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி அளித்த பேட்டி:
தேசிய கல்வி தரவரிசையில், முதல், 50 இடங்களைப் பிடித்த தொழில்நுட்ப நிறுவனங்களின் கண்டுபிடிப்பாளர்களை, முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் துறையினருடன் இணைக்கும் முயற்சியாக, கடந்த இரண்டாண்டுகளாக, 'இன்வென்டிவ் 2025' என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
புதுடில்லி, ஹைதராபாதை தொடர்ந்து, இந்தாண்டு சென்னை ஐ.ஐ.டி.,யில், இந்த நிகழ்ச்சி வரும் 28ம் தேதியும், மார்ச் 1ம் தேதியும் நடக்க உள்ளது.
இதை, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் துவக்கி வைக்க உள்ளார்.
இதில், பங்கேற்க, 262 கண்டுபிடிப்பாளர்கள் விண்ணப்பித்த நிலையில், 186 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து, சென்னை ஐ.ஐ.டி., திருச்சி என்.ஐ.டி., மற்றும் வி.ஐ.டி., - எஸ்.ஆர்.எம்., மற்றும் அமிர்தா உள்ளிட்ட நிறுவனங்களின் கண்டுபிடிப்புகள் இடம் பெறுகின்றன. நாட்டின், 250 முன்னணி நிறுவனங்களும், 100க்கும் மேற்பட்ட 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன.
நாடு தொழில்நுட்ப திறனை எதிர்நோக்கி உள்ள விமான போக்குவரத்து, பாதுகாப்பு, விண்வெளி ஆய்வுத்துறை உள்ளிட்டவற்றில், 21 கண்டுபிடிப்புகள்; மிகப்பெரிய கடல் வளத்தை கொண்டுள்ள நாம், கடல் வளத்தை பயன்படுத்தும் வகையில், கடல் சார்ந்த, ஆறு தொழில்நுட்பங்கள் தொடர்பான கண்டுபிடிப்புகள் இடம் பெறுகின்றன.
பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் இறக்குமதி செய்வதால், நம் நாட்டு சுகாதாரத்துறை பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்குகிறது.
அதற்கான தீர்வை நோக்கும் வகையில், மருத்துவம், சுகாதாரம், பராமரிப்பு பொறியியல் சார்ந்த, 53 கண்டுபிடிப்புகள்; அனைத்து தொழில்களும் மின் சக்தியை சார்ந்திருக்கும் நிலையில், அதை தயாரிப்பதற்கான தொழில்நுட்பங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்கும் வகையிலான, 33 கண்டு பிடிப்புகளும் இடம்பெற உள்ளன.
அதேபோல், எதிர்காலத்தை ஆள உள்ள செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் தொழில்நுட்பங்கள் சார்ந்த, 19 கண்டுபிடிப்புகளும் இடம் பெறுகின்றன. இதில், காப்புரிமை பெற்ற பல்வேறு கண்டுபிடிப்புகள் இடம் பெறுவதால், 25க்கும் மேற்பட்டவற்றை மேம்படுத்தி, பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதாவது, கல்வி நிறுவனங்களையும், தொழில் நிறுவனங்களையும் இணைக்கும் போது தான், சமூக தேவைகள், கண்டுபிடிப்பாளர்களுக்கான யோசனைகள் கிடைக்கும்.
அந்த வகையில், இந்த நிகழ்ச்சி, தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பை வழங்கும். நிகழ்ச்சியில், நாட்டின் மிக முக்கிய தொழில் துறையினரும், கல்வியாளர்களும் பங்கேற்பதால், பொது மக்கள், மாணவர்களுக்கு அனுமதி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
'இன்வென்டிவ் - 2025' நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அருணாச்சலம் உள்ளிட்ட பேராசிரியர்கள் உடனிருந்தனர்.