தண்ணீர்குளம் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவள்ளூர்,:திருவள்ளூர் அருகே, தண்ணீர்குளம் கிராமத்தில், ஆக்கிரமிப்பு கட்டடங்களை நெடுஞ்சாலைத் துறையினர், பொக்லைன் இயந்திரம் வாயிலாக அகற்றினர்.
சென்னை பாடியில் இருந்து, ஆவடி, திருநின்றவூர், செவ்வாப்பேட்டை வழியாக திருவள்ளூர் நோக்கி வரும் வாகனங்கள் தண்ணீர்குளம் சாலை சந்திப்பை கடந்து செல்ல வேண்டும். அதேபோல, திருவள்ளூரில் இருந்து, சென்னைக்கு செல்பவர்களும் அந்த வழியாகத்தான் செல்ல வேண்டும்.
அந்த சாலை சந்திப்பின் இருந்து பிரியும் மற்றொரு பாதையில் பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்ல முடியும். இந்த நிலையில், தண்ணீர்குளம் சாலை சந்திப்பு வளைவு பகுதியாகவும், மிக குறுகலாகவும் இருப்பதால் அடிக்கடி அங்கு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
இதையடுத்து, தண்ணீர்குளம் சாலை சந்திப்பை மேம்படுத்தும் வகையில், 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை, கடந்த மாதம் நடந்தது.
இந்த நிலையில், சாலை சீரமைக்கும் பணிக்கு இடையூறாக, அப்பகுதியில், 15க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கட்டடங்கள் உள்ளன. இதையடுத்து, சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், கடைகள் ஆகியவற்றை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் சிற்றரசு உத்தரவின்படி, உதவி கோட்டப் பொறியாளர் தஸ்நாவிஸ் பெர்ணான்டோ தலைமையிலான அதிகாரிகள் நேற்று அதிரடியாக பொக்லைன் இயந்திரம் வாயிலாக அகற்றினர்.
ஆக்கிரமிப்பு அகற்றியதும், சாலை மேம்பாட்டு பணி தொடர்ந்து நடைபெறும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.