'கலைஞர் கனவு இல்லம்' திட்ட கம்பிகள் துருப்பிடித்து நாசம்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட ஊராட்சிக்கு, 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தில் வீடுகள் மற்றும் தனிநபர் கழிப்பறைகள் கட்டித் தரப்படுகின்றன.

வீடு கட்டும் பணிக்கு, முறுக்கு கம்பிகள், தமிழக அரசு வாயிலாக, வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்துக்கு அனுப்பப்படுகிறது.

அங்கு, 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தில் வீடுகள் கட்டும் பயனாளிகளை வரவழைத்து, கம்பிகளை, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி வழங்குவார்.

வீடு கட்டும் பயனாளிகளுக்கு வழங்க, பல ஆயிரம் ரூபாய் மதிப்பில் முறுக்கு கம்பிகள், திருவாலங்காடு ஒன்றிய அலுவலக வளாகத்துக்கு, இரண்டு வாரத்திற்கு முன் கொண்டு வரப்பட்டு, திறந்தவெளியில் போடப்பட்டுள்ளன.

இதனால், மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வருகிறது. இதேநிலை தொடர்ந்தால், கம்பிகள் துருப்பிடித்து, அதன் உறுதித்தன்மையை இழக்கும் நிலை உள்ளது. என, புலம்புகின்றனர்.

திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் காளியம்மாள் கூறுகையில், ''வீடு கட்ட தேவையான இரும்பு கம்பிகளை, பயனாளிகளுக்கு தேவையான போது வழங்குகிறோம். கம்பிகளை வரவழைத்து எடுத்துச் செல்ல பயனாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம்,'' என்றார்.

Advertisement