ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மறியலுக்கு அனுமதி மறுப்பு

துாத்துக்குடி:ஸ்டெர்லைட் ஆலையை திறக்க, போராட்டம் நடத்த இருந்த ஆதரவாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

துாத்துக்குடி சிப்காட், ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலைக்கு எதிராக, 2018ல் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அந்த ஆண்டு, மே மாதம் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதால், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர்; ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. தற்போது ஆலையை திறக்க ஒரு தரப்பினரும், நிரந்தரமாக அகற்ற மற்றொரு தரப்பினரும் கலெக்டர் அலுவலகத்தில் அடிக்கடி மனு அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே, பல்வேறு அமைப்புகள் சார்பில், ஆலையை திறக்க வலியுறுத்தி நேற்று தர்ணா போராட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீஸ் அனுமதிக்கவில்லை.

எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் வெளியிட்ட அறிக்கை:

நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க, மாவட்டத்தில் எந்த ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தவும் முற்றிலும் அனுமதி இல்லை. மீறி போராட்டம் நடத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement