மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஷிண்டேவுக்கு கொலை மிரட்டல்

மும்பை :'மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை வெடிகுண்டு வீசி கொல்வோம்' என, 'இ - மெயில்' வாயிலாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.

சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக உள்ளார். இந்நிலையில், 'ஷிண்டேவின் கார் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும்' என, போலீசாருக்கு இ - மெயில் வாயிலாக நேற்று கொலை மிரட்டல் வந்தது.

மிரட்டல் விடுத்தது யார் என்பதை போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், ஏக்நாத் ஷிண்டேவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு, கொலை மிரட்டல் இ - மெயில் அனுப்பப்படுவது புதிதல்ல. கல்லுாரி மாணவர் ஒருவர், ஏக்நாத் ஷிண்டேவுக்கும், அவரின் மகனும், எம்.பி.,யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டேவுக்கும் சமூக ஊடகம் ஒன்றின் வாயிலாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், புனேவைச் சேர்ந்த 19 வயது சுபம் வர்கத் என்பவரை கைது செய்து விசாரித்தனர்.

Advertisement