எலான் மஸ்க் நிறுவனத்தின் ஏ.ஐ., இந்தியாவில் அறிமுகம்

புதுடில்லி, பிப். 21-

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கின், 'எக்ஸ் ஏ.ஐ.,' நிறுவனம், 'கிராக் 3' எனும் செயற்கை நுண்ணறிவு செயலியை இந்தியாவில், 'ஆப்பிள் மொபைல் போனில்' அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில், 'ஆண்ட்ராய்டு' மொபைல்களிலும் இந்த சேவை கிடைக்கும்.

இணையத்தில் தேவையான தகவல்களை தேடுவது ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு வாயிலாக அடுத்த பரிணாமத்திற்கு சென்றுள்ளது. இதையறிந்து, 'கூகுள்' போன்ற தேடுபொறி நிறுவனங்கள், 'பேஸ்புக், எக்ஸ்' ஆகிய சமூக வலைதளங்கள் செயற்கை நுண்ணறிவு செயலிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன.

அந்த வகையில் எலான் மஸ்கின் எக்ஸ் செயற்கை நுண்ணறிவு தயாரிப்புகளுக்கு என 'எக்ஸ் ஏ.ஐ.,' எனும் நிறுவனத்தை துவங்கியுள்ளார்.

இந்நிறுவனம் கேள்விகள் வாயிலாக தகவல்களை பெறுவதற்கு என்று கிராக் ஏ.ஐ., செயலியை கடந்த 2023ல் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியது.

அதன் மூன்றாவது பதிப்பான 'கிராக் 3' தற்போது இந்தியாவில் ஆப்பிள் மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்வதற்கு கிடைக்கிறது. இந்த 'கிராக் 3' முந்தைய பதிப்புகளை விட 10 மடங்கு வேகத்தில் தகவல்களை திரட்டி தரும் திறன் பெற்றது என கூறப்படுகிறது.

இது விரைவில் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களிலும் பயன்பாட்டுக்கு வரும் என அறிவித்துள்ளனர். இதன் வாயிலாக கூகுளின் 'ஜெமினி', பேஸ்புக்கின் 'மெட்டா ஏ.ஐ.,' சீனாவின் 'டீப்சீக்' ஆகிய செயலிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

Advertisement