மகா கும்பமேளாவில் 62 கோடி பேர் பங்கேற்பு; யோகி ஆதித்யநாத்

5


பிரயாக்ராஜ்: மகா கும்பமேளாவில் 62 கோடி பேர் கலந்து கொண்டு புனித நீராடியதாக, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உ.பி.,யின் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13ம் தேதி துவங்கியது. வரும் 26ம் தேதி வரை நடக்க உள்ளது. மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். குறிப்பாக மகர சங்கராந்தி, மவுனி அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகிய நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருந்தது.

இந்த நிலையில், மகா கும்பமேளாவில் இதுவரையில் 62 கோடி பேர் பங்கேற்று புனித நீராடி இருப்பதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

ஆக்ராவில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: மகா கும்பமேளாவில் இதுவரையில் 62 கோடி பேர் பங்கேற்று புனித நீராடி உள்ளனர். இந்த கும்பமேளாவில் மக்களிடம் அதிக ஈர்ப்பு உண்டாகியுள்ளது. இது எனக்கு மிகவும் முக்கியமானது. ஆன்மிகம் மற்றும் கலாசாரம் நிறைந்து காணப்படும் பிரஜ் பூமிக்கு நான் வந்துள்ளேன்.
உலகில் நடக்கும் ஆன்மிக விழாவாக இருந்தாலும் சரி, அல்லது சுற்றுலா நோக்கத்திற்காக நடக்கும் நிகழ்வாக இருந்தாலும் சரி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள், இவ்வளவு மக்கள் கூடுவது, இந்த நூற்றாண்டின் அரிய நிகழ்வாகும், எனக் கூறினார்.

Advertisement