காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் சசி தரூர்!

11

திருவனந்தபுரம்: ''நான் கட்சிக்கு பணியாற்ற தயாராக இருக்கிறேன். ஆனால், கட்சிக்கு அதில் விருப்பமில்லை எனில், எனக்கு வேறு விருப்பத்தேர்வுகள் இருக்கின்றன,'' என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி., யுமான சசிதரூர் தெரிவித்துள்ளார்.


முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், திருவனந்தபுரம் தொகுதியில் இருந்து நான்காம் முறையாக எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். ஐ.நா., சபையில் உயர் பதவி வகித்தவர். மனதில் பட்டதை நேர்மையாக பேசக்கூடியவர்.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியையும், கேரளாவில் எல்.டி.எப் அரசாங்கத்தையும் புகழ்ந்து பேசினார். இதை கட்சித்தலைமை ரசிக்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்டதாக தகவல்கள் வெளியாகின. மாநில காங்கிரஸ் கட்சி சரியான தலைமை இன்றி தவிப்பதாகவும் அவர் நீண்ட நாட்களாக கூறி வருகிறார். இதுவும், உள்ளூர் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த பிப்.,18ம் தேதி டில்லி வந்த சசி தரூர், காங்கிரஸ் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை சந்தித்துப் பேசினார். அந்த அரை மணி நேரத்தில் தான் சில முக்கிய பிரச்னைகளை தெரிவித்ததாக தரூர் தெரிவித்தார்.
டில்லி திரும்பிய அவர், செய்தியாளர்களிடம் உட்கட்சி பிரச்னை பற்றி கூற மறுத்து விட்டார். ''இன்று முக்கிய கிரிக்கெட் மேட்ச். எல்லோரும் சென்று பாருங்கள்,'' என்று கூறிச்சென்றார்.


சில நாட்களுக்கு முன், காங்கிரஸ் உட்கட்சி விவகாரம் குறித்து அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

நான் எப்போதும் அணுகக்கூடியவனாகவே இருக்கறேன். கட்சிக்கு பணியாற்ற தயாராக இருக்கிறேன். ஆனால், அவர்களுக்கு விருப்பமில்லை என்றால், எனக்கும் வேறு விருப்பத்தேர்வுகள் இருக்கின்றன.

கட்சி மாறுவது குறித்த வதந்திகளை மறுக்கிறேன். என்னை ஒரு அரசியல்வாதியாக நான் ஒருபோதும் நினைத்ததில்லை. புதிய வாக்காளர்களை ஈர்க்க காங்கிரஸ் தனது தளத்தை கேரளாவில் விரிவுபடுத்த வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.இவ்வாறு சசி தரூர் கூறினார்.

Advertisement