புலம்பெயர் தொழிலாளர் பிரச்னை; முத்தரப்புக்குழு அமைக்க யோசனை

திருப்பூர்; புலம்பெயர் தொழிலாளர் பாதுகாப்பு கருத்தரங்கம், திருப்பூரில், ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் நேற்று நடந்தது. மாநில தலைவர் காசி விஸ்வநாதன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். புலம்பெயர் தொழிலாளர் ஒருங்கிணைப்பாளர் நடராஜன் வரவேற்றார். ஏ.ஐ.டி.யு.சி., தேசிய செயலாளர் வஹிதா நிஜாம் பேசினார்.
கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்ட கருத்துகள்:
நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 50 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள், புலம்பெயர்ந்து தமிழகத்துக்கு வந்து பணிபுரிகின்றனர். பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் மறுக்கப்படுகிறது. வாழ்க்கை தேடிவரும் தொழிலாளரை குற்றவாளியாக சித்தரிக்கும் முனைப்பு கூடாது.
ரயில்வே ஸ்டேஷன், பணியிடங்கள், குடியிருப்புகளில் புலம்பெயர் தொழிலாளர் விவரங்களை தொழிலாளர் துறை, தொழிற்சங்கங்கள் உதவியுடன் சேகரிக்க வேண்டும். கூடுதல் தொழிலாளர் ஆணையர் தலைமையில், புலம்பெயர் தொழிலாளர் பிரிவை உருவாக்கவேண்டும்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கணக்கெடுத்து, அவர்களது சொந்த மாநிலத்திலும், தமி ழகத்திலும் பதிவு செய்து அடையாள அட்டை வழங்க வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களின்படியான உரிமைகள் அனைத்தையும் கிடைக்கச் செய்யவேண்டும். அரசு, தொழில் நிறுவனங்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்பு குழு அமைத்து, புலம்பெயர்ந்த தொழிலாளர் பிரச்னைகளை விவாதித்து, தீர்வு காணவேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டது.
எம்.பி., சுப்பராயன், கருத்தரங்கை நிறைவு செய்து பேசினார். ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலாளர்கள் பாஸ்கர், சேகர் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி உள்பட பல்வேறுவகை தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஒடிசா, பீஹார், உ.பி., மேற்கு வங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்றனர்.