கோலி சதம்... இந்தியா அபாரம்: அரையிறுதிக்கு முன்னேறியது

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு இந்திய அணி ஜோராக முன்னேறியது. நேற்றைய லீக் போட்டியில் கோலி சதம் விளாச, 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. பவுலிங், பேட்டிங்கில் இந்தியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தியதால், போட்டியில் வழக்கமான பரபரப்பு காணப்படவில்லை.
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கின்றன. துபாயில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் (பகலிரவு) இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் பகர் ஜமானுக்கு பதில் இமாம்-உல்-ஹக் இடம் பெற்றார். 'டாஸ்' வென்ற கேப்டன் முகமது ரிஸ்வான், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
மந்தமான துவக்கம்: பாகிஸ்தான் அணிக்கு பாபர் ஆசம், இமாம்-உல்-ஹக் நிதான துவக்கம் தந்தனர். முதல் ஓவரில் ஷமி, 5 'வைடு'கள் வீச, 6 ரன் கிடைத்தன. 5வது ஓவரை வீசிய ஷமிக்கு வலது கணுக்காலில் வலி ஏற்பட, வெளியேறினார். இதே போல வெப்பத்தின் தாக்கம் காரணமாக ரோகித்தும் வெளியேறினார். இருவரும் சிறிது நேரத்தில் களத்திற்கு திரும்பினர்.
8வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது பந்தில் பாபர் (23) வீழ்ந்தார். அக்சர் நேரடி 'த்ரோ'வில் இமாம் (10) ரன் அவுட்டானார். 10 ஓவரில் பாகிஸ்தான் 52/2 ரன் எடுத்தது.
மிரட்டல் பவுலிங்: பின் கேப்டன் ரிஸ்வான், சவுத் ஷகீல் பொறுப்பாக ஆடினர். இவர்கள 3வது விக்கெட்டுக்கு 104 ரன் சேர்த்த நிலையில், அக்சர் படேல் 'செக்' வைத்தார். இவரது 'சுழலில்' ரிஸ்வான் (46) போல்டானார். ஹர்திக் பாண்ட்யா பந்தில் ஷகீல் (62) அவுட்டானார். ஜடேஜா வலையில் தயாப் தாஹிர் (4) போல்டானார். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் 33.1 ஓவரில் 151/2 என வலுவாக இருந்தது. அப்போது 300 ரன் எட்ட வாய்ப்பு இருந்தது. ஆனால், இந்திய பவுலர்கள் பிடியை இறுக்க, 34.5 ஓவரில் 165/5 ரன் என சரிந்தது.
நழுவிய 'ஹாட்ரிக்': 43வது ஓவரை வீசிய 'ஸ்பின்னர்' குல்தீப் இரட்டை 'அடி' கொடுத்தார். 3வது பந்தில் சல்மான் அகா (19) அவுட்டானார். 5வது பந்தில் ஷாகீன் ஷா அப்ரிதி (0) எல்.பி.டபிள்யு., ஆனார். 6வது பந்தை நசீம் ஷா தடுத்து ஆட, 'ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது. நசீம் ஷா (14) நிலைக்கவில்லை. ஷமி ஓவரில் குஷ்தில், ஹாரிஸ் ராப் தலா ஒரு சிக்சர் அடித்தனர். ஹாரிஸ் (8) ரன் அவுட்டானார். குஷ்தில் ஷா, 38 ரன் எடுத்தார். பாகிஸ்தன் அணி 49.4 ஓவரில் 241 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் குல்தீப் அதிபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.
சுப்மன் கலக்கல்: சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் சூப்பர் துவக்கம் தந்தனர். நசீம் ஷா ஓவரில் ரோகித் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார். ரோகித், 20 ரன்னுக்கு அவுட்டானார். ஷாகீன் ஷா அப்ரிதியை ஒருகை பார்த்த சுப்மன் பவுண்டரிகளாக அடித்தார். அப்ரார் அகமது சுழலில் சுப்மன்(46) போல்டானார். இந்தியா 18 ஓவரில் 102/2 ரன்னை எட்டியது.
ஸ்ரேயாஸ் விளாசல்: பின் கோலி, ஸ்ரேயாஸ் அபாரமாக ஆடினர். நசீம் ஷா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கோலி, அரைசதம் கடந்தார். மறுபக்கம் சல்மான் பந்தில் ஸ்ரேயாஸ் ஒரு இமாலய சிக்சர் (102 மீ., துாரம்) சிக்சர் விளாசினார். அரைசதம் கடந்த ஸ்ரேயாஸ், 56 ரன்னுக்கு குஷ்தில் பந்தில் இமாம்-உல்-ஹக்கின் சர்ச்சைக்குரிய 'கேட்ச்சில்' வெளியேறினார். 'ரீப்ளே'யில் பந்து தரையில் பட்டது போல தெரிந்தது. ஹர்திக் பாண்ட்யா (8) நிலைக்கவில்லை.
திக்...திக் சதம்: 42 ஓவரில் இந்தியா 238/4 ரன் எடுத்திருந்தது. அப்போது கோலி 95 ரன்னில் இருந்தார். வெற்றிக்கு 4 ரன், கோலி சதத்திற்கு 5 ரன் தேவை என்ற சுவாரஸ்ய நிலை ஏற்பட்டது. குஷ்தில் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்த கோலி 96 ரன்னை எட்டினார். அடுத்த பந்தில் அக்சர் ஒரு ரன் எடுத்தார். 3வது பந்தில் ஒரு கலக்கல் பவுண்டரி அடித்த கோலி, ஒருநாள் அரங்கில் 51வது சதம் எட்டினார். இந்திய அணி 42.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 244 ரன் எடுத்து சுலப வெற்றி பெற்றது. கோலி(100, 7 பவுண்டரி), அக்சர் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.
பும்ராவுக்கு விருது
ஐ.சி.சி., சார்பில், கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், டெஸ்ட் வீரராக இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 31, தேர்வு செய்யப்பட்டிருந்தார். இதற்கான விருது, நேற்று துபாயில் நடந்த இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியின் போது பும்ராவுக்கு வழங்கப்பட்டது. தவிர இவர், கடந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட், 'டி-20' அணிகளுக்கும் தேர்வானார். இதற்கான தொப்பிகளையும் பெற்றுக் கொண்டார். காயம் காரணமாக இவர், சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கவில்லை.
பாக்., வாய்ப்பு எப்படி
வங்கதேசம், பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா, 'ஏ' பிரிவில் இருந்து முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. நியூசிலாந்து, இந்தியாவிடம் வீழ்ந்த பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு சற்று குறைந்தது.
* பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற அரிய வாய்ப்பு உள்ளது. நியூசிலாந்து அணி, வங்கதேசம் (பிப். 24), இந்தியாவிடம் (மார்ச் 2) மோசமாக தோற்க வேண்டும்.
* வங்கதேசத்துக்கு எதிராக (பிப். 27) பாகிஸ்தான் அணி இமாலய வெற்றி பெற வேண்டும். அப்போது நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேச அணிகள் தலா 2 புள்ளிகளுடன் சமநிலை பெறும். 'ரன்-ரேட்' அடிப்படையில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறலாம்.
மூன்றாவது வெற்றி
ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 3வது வெற்றியை பதிவு செய்தது. இரு அணிகளும் 6 முறை மோதிய போட்டியில் இந்தியா 3 (2013, 2017, 2025), பாகிஸ்தான் 3ல் (2004, 2009, 2017) வெற்றி பெற்றன.
தோல்வி இல்லை
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிய ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததில்லை என்ற வரலாறு தொடர்கிறது. இங்கு விளையாடிய 8 ஒருநாள் போட்டியில், 7ல் வென்றது. ஒரு போட்டி 'டை' ஆனது.
12 முறை
கடந்த 2023, உலக கோப்பை பைனலில் இருந்து இந்தியா தொடர்ந்து 12வது முறையாக 'டாஸ்' இழந்தது. நீண்ட காலம் 'டாஸ்' வெல்லாத அணி பட்டியலில் முதலிடம் பெற்றது. அடுத்த இடத்தில் நெதர்லாந்து (11 முறை, 2011, மார்ச்-2013 ஆக.) உள்ளது.
17 உதிரி
முதல் ஓவரில் ஷமி வீசிய 5 'வைடு' சேர்த்து மொத்தம் 17 உதிரி ரன்னை இந்தியா விட்டுக் கொடுத்தது.
குல்தீப் '300'
நேற்று 3 விக்கெட் சாய்த்த குல்தீப், சர்வதேச கிரிக்கெட்டில் 300 விக்கெட் மைல்கல்லை எட்டினார். 110 ஒருநாள் போட்டியில் 177, 13 டெஸ்டில் 56 விக்கெட், 40 'டி-20' போட்டியில் 69 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
பாண்ட்யா '200'
நேற்று 2 விக்கெட் சாய்த்த ஹர்திக் பாண்ட்யா, சர்வதேச கிரிக்கெட்டில் 200 விக்கெட் எட்டினார். 91 ஒருநாள் போட்டியில் 89, 11 டெஸ்டில் 17, 114 'டி-20' போட்டியில் 94 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
நழுவிய கைகள்
பாண்ட்யா பந்தில் ரிஸ்வான் அடித்த பந்தை பிடிக்க தவறினார் ஹர்ஷித் ராணா. ஷகீல் அடித்த பந்தை 'லாங்-ஆன்' திசையில் குல்தீப் கோட்டைவிட்டார். இதற்கு பின் இருவரும் தாக்குப்பிடிக்காததால், இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
* இந்தியாவின் சுப்மன் கில் 35 ரன் எடுத்த போது ஹாரிஸ் ராப் பந்தில் சுப்மன் கொடுத்த சுலப கேட்ச்சை ஹாரிஸ் ராப் நழுவவிட்டார். இதை பயன்படுத்திய சுப்மன் 46 ரன் எடுத்தார்.
147 'டாட் பால்'
பாகிஸ்தான் நேற்று மந்தமாக ஆடியது. 147 பந்துகளில் ரன் எடுக்கவில்லை.
மேலும்
-
இரட்டிப்பு பணம் மோசடி நிறுவன இயக்குநர்கள் கைது
-
கிராமத்தில் புகுந்த யானை தாக்கியதில் கன்று குட்டி பலி
-
ரூ.12.50 லட்சம் வைரம் வாங்கி மோசடி 2 பெண்கள் உட்பட 4 பேருக்கு வலை
-
தோட்டக்கலை அலுவலர் குழாய் திருட்டில் சிக்கினார்
-
கண்காணிப்பு கேமரா அமைத்த காங்., கவுன்சிலருக்கு மிரட்டல்
-
பைக் மீது அரசு பஸ் மோதி தந்தை, மகள் பரிதாப பலி