சிவராத்திரிக்கு தயாராகும் திருமூர்த்திமலை கோவிலில் துாய்மை பணிகள்

உடுமலை; உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், சிவராத்திரி விழாவிற்காக துாய்மை பணிகள் நடக்கிறது.
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், தோணியாற்றின் கரையில், சிவன்,விஷ்ணு, பிரம்மா ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில், ஆண்டு தோறும் மகா சிவராத்திரியன்று, ஊர் பொதுமக்களால் திருச்சப்பரம் கொண்டு வரப்பட்டு, மூலாலய கோபுரமாக நிறுவப்படுவது, பாரம்பரியமாக கடைபிடிக்கப்படுகிறது.
நடப்பாண்டு மகா சிவராத்திரி விழா, வரும், 25ம் தேதி, இரவு, 8:00 மணிக்கு, பூலாங்கிணர் கிராமத்தில் திருச்சப்பர பூஜையுடன் துவங்குகிறது. பல்வேறு கிராமங்கள் வழியாக, திருச்சப்பர ஊர்வலம் துவங்கி, 26ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு திருமூர்த்திமலை கோவிலுக்கு வந்து சேரும் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து, இரவு, 8:00 மணிக்கு, முதற்கால பூஜை, அபிேஷகம், தீபாராதனையும், இரவு, 10:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜை, மகா அபிேஷகம், தீபாராதனை நடக்கிறது.
27ம் தேதி அதிகாலை, 2:00 மணிக்கு, மூன்றாம் கால பூஜையும், அதிகாலை, 4:00 மணிக்கு, நான்காம் கால பூஜையும் நடக்கிறது. அதிகாலை, 5:00 மணிக்கு, சிறப்பு அலங்காரம், சோடஷ உபசார தீபாராதனை நடக்கிறது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு, கோவில் வளாகத்தில், பஜனை, கிராமிய கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், பக்தி இன்னிசை நிகழ்ச்சி, தேவராட்டம் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடக்கிறது.
உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ள நிலையில், மூலாலய கோபுரம் நிறுவும் பகுதி, மூலவர் சன்னதியாக உள்ள மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள பாறை பகுதி மற்றும் கோவில் வளாகத்தில் துாய்மை பணி நடக்கிறது.