சிறந்த அரசு பள்ளிக்கு விருது 27க்குள் பட்டியல் அனுப்ப உத்தரவு

உடுமலை; அரசு பள்ளிகளில் பல்வேறு திறன்கள் அடிப்படையில் சிறந்த பள்ளியை தேர்வு செய்து பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்படுகிறது.

அரசு பள்ளிகளில் தரத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவர்களுக்கும் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சிறந்த பள்ளியை தேர்வு செய்து விருது வழங்கப்படவுள்ளது. இதற்காக, நடப்பாண்டில் கற்றல், கற்பித்தல், பள்ளி கட்டமைப்பு, வருவாய் வழி திறனறித் தேர்வில் மாணவர்களின் வெளிப்பாடு, போட்டிகளில் மாணவர்களின் திறன்கள், பள்ளியின் கட்டமைப்பு, பொதுத்தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி, சிறப்பு மதிப்பெண்கள், பள்ளியின் இணை செயல்பாடுகள், காய்கறி தோட்டம், பள்ளி மேம்பாட்டு திட்டம் மற்றும் அதன் செயலாக்கம், கலைத்திருவிழா பங்களிப்பு, கடந்த மூன்றாண்டுகளில் ஆசிரியர்கள் மேற்கொண்ட பயிற்சிகளின் வாயிலாக, வகுப்பறை சூழல் மாற்றப்பட்டிருப்பது உள்ளிட்ட சாராம்சங்களின் அடிப்படையில் பள்ளிகளை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவிலான குழு மற்றும் மாநில அளவிலான குழு என இரண்டு அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளை தேர்ந்தெடுப்பது குறித்தும், எந்தெந்த செயல்பாடுகளுக்கு எத்தனை மதிப்பெண்கள் என்பதும், கல்வித்துறை வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையில், மாவட்ட அளவில் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இரண்டு, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இரண்டு என ஒரு மாவட்டத்துக்கு நான்கு அரசு பள்ளிகள் வீதம், வரும் 27ம் தேதிக்குள் பட்டியல் அனுப்புவதற்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பள்ளிகளின் சிறப்பம்சங்கள் குறித்து, கருத்துருக்களை அனுப்புவதற்கு மாவட்ட கல்வித்துறை அரசு பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதன் வாயிலாக, அரசு பள்ளிகளில் கட்டமைப்புகள் மேம்படும் வாய்ப்புள்ளது.

Advertisement