கர்நாடகா பஸ் மீது லாரி மோதல் பயணிகள் 10 பேர் படுகாயம்

கடலுார் : வடலுாரில், கர்நாடகா அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில 10 பயணிகள் படுகாயமடைந்தனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து 40 பேர், புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள சனீஸ்வரன் கோவிலுக்கு, அம்மாநில அரசு சொகுசு பஸ்சில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, கடலுார் மாவட்டம், வடலுார் நான்கு முனை சந்திப்பு அருகே வந்தபோது, சேலம் மாவட்டம், ஆத்துாரில் இருந்து கடலுார் நோக்கி வந்த லாரி எதிர்பாராதவிதமாக பஸ் மீது மோதி, அருகில் உள்ள சாலை சென்டர் மீடியனில் மோதி நின்றது.

இந்த விபத்தில், பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ் பயணிகளான பெங்களூருவை சேர்ந்த சக்ரா மனைவி வித்யா,55; சுப்ரமணிய ராவ் மனைவி ஜெயமாலா,50; பெக்கலாட் வில்சன் சாமு மனைவி மேரி, 44; கோலார் ராமகிருஷ்ணன், 50; கிருஷ்ணமூர்த்தி, 52; உள்ளிட்ட 10 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

வடலுார் போலீசார், விபத்தில் சிக்கிய லாரியை கிரேன் மற்றும் பொக்லைன் உதவியுடன் மீட்டு போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து குறித்து வடலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement