தனது படத்தை வரைந்து பரிசளித்த மாணவருக்கு முதல்வர் பாராட்டு

நெல்லிக்குப்பம் : தனது படத்தை வரைந்து பரிசளித்த மாணவரை, முதல்வர் ஸ்டாலின் போனில் தொடர்பு கொண்டு பாராட்டினார்.

கடலுார் மாவட்டம், நெல்லிகுப்பத்தை சேர்ந்தவர் சசிக்குமார். இவரது மகன் கோகுல்நாத்,13; திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடந்த 21ம் தேதி கடலுார் வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, அவரது படத்தை வரைந்து பரிசாக வழங்கினார்.

மாணவர் வழங்கிய ஓவியத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்த முதல்வர், அந்த ஓவியத்தில் மாணவரை கையெழுத்திட செய்து பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், நேற்று காலை கோகுல்நாத்தின் தந்தை சசிக்குமாரின் மொபைல் போனில் தொடர்பு கொண்ட முதல்வர் ஸ்டாலின், மாணவர் கோகுல்நாத்திடம் ஒரு நிமிடம் பேசினார்.

அப்போது, எனது படத்தை அழகாக வரைந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. என் படத்தை ஏன் வரைந்தாய். ஓவிய பயிற்சிக்கு செல்கிறாயா. நன்றாக படிக்க வேண்டும் என்றார்.

அதற்கு பதில் அளித்த மாணவர் கோகுல்நாத், நான் ஓவிய பயிற்சிக்கு செல்வதில்லை. சிறு வயதில் இருந்தே படம் வரைவதில் நானே பயிற்சி செய்கிறேன். தங்களுக்கு கொடுப்பதற்காகவே தங்களது படத்தை வரைந்தேன் என்றார்.

முதல்வர் போனில் தொடர்பு கொண்டு பேசியதால், மாணவர் கோகுல்நாத்தின் குடும்பத்தார் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement