3ம் மண்டல பாசனத்துக்கு நீர் வழங்குவது தாமதமாகும்!

உடுமலை; பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் இருந்து, திருமூர்த்தி அணைக்கு நீர் வரும் காண்டூர் கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்திற்கு, கடந்த மாதம், 29ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 94 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில், திருமூர்த்தி அணையில் நீர் மட்டம் வேகமாக சரிந்தது. இந்நிலையில், இன்று, (24ம் தேதி) முதல் சுற்று நிறைவடைகிறது.

தொடர்ந்து, திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, காண்டூர் கால்வாய் வழியாக நீர் கொண்டு வந்து, திருமூர்த்தி அணையில் நீர் சேகரித்த பின், பாசனத்துக்கு நீர் திறக்க திட்டமிடப்பட்டது. இதனால், இரண்டாம் சுற்றுக்கு நீர் திறப்பதில், 10 நாட்கள் வரை இடைவெளி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக, திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து நீர் எடுப்பது நிறுத்தப்பட்டது.

இதனால், காண்டூர் கால்வாயில் நீர் வரத்து இல்லை. பராமரிப்பு பணி முடிந்து, மீண்டும் காண்டூர் கால்வாயில் நீர் எடுத்து, திருமூர்த்தி அணையில் சேகரிக்க வேண்டியுள்ளது. இதனால், இரண்டாம் சுற்றுக்கு நீர் திறப்பு மேலும் தாமதமாகும் சூழல் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement