ரோட்டோர மரங்கள் பராமரிப்பின்றி காய்வதால் பறிபோகும் பசுமை! சிறப்பு திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்ப்பு

உடுமலை; வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, பரவும் தீ மற்றும் தண்ணீர் ஊற்றி பராமரிக்காததால், கோடை துவங்கியதும், உடுமலை சுற்றுப்பகுதிகளில், நுாற்றுக்கணக்கான மரங்கள் வாட துவங்கியுள்ளன. பசுமை பறிபோவதை தடுக்க, நெடுஞ்சாலைத்துறை சார்பில் சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

உடுமலை பகுதியிலுள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய ரோடுகள் மற்றும் கிராமப்புற ரோடுகளில், ஆயிரக்கணக்கான மரங்கள் உள்ளன. வாகன ஓட்டுநர்களுக்கு இதமளித்து, சுற்றுச்சூழலிலும், இம்மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

திருமூர்த்திமலை, அமராவதி உட்பட ரோடுகளின் இருபுறங்களிலும், குடை பிடித்தது போன்று வளர்ந்திருக்கும் மரங்களிடையே பயணிப்பதை, சுற்றுலாப்பயணிகளே அதிகம் விரும்புகிறார்கள்.

உடுமலை பகுதியில், பசுமை சாலைகள் என பெயர் பெறும் அளவுக்கு, பல்வேறு திட்டங்களின் கீழ் நடவு செய்யப்பட்ட, மரக்கன்றுகள் மற்றும் மரங்கள், தற்போது, தண்ணீரின்றி பரிதாபமாக காட்சியளிக்கிறது.

கொளுத்தும் வெயில்



உடுமலை சுற்றுப்பகுதிகளில், கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து வறண்ட வானிலையே நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல இடங்களில், ரோட்டோர புற்களில், வெப்பம் அதிகரிப்பு உட்பட காரணங்களால், திடீர் தீ ஏற்படுகிறது. மேலும், மரநிழலில், ஒதுங்கி, புகை பிடிப்பவர்கள் வீசியெறியும் பொருட்களாலும் தீ பரவுகிறது.

அப்போது, வரிசையாக உள்ள மரங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன. பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், ராவணாபுரம் பகுதியில் ஏற்பட்ட தீயில், 10க்கும் அதிகமான மரங்கள் கருகி விட்டன.

இதே நிகழ்வு பிற இடங்களிலும் ஏற்படும் அபாயம் உள்ளது. பல ஆண்டுகள் செழித்து வளர்ந்த மரங்கள், குறுகிய நேரத்தில், தீயில் கருகுவது இயற்கை ஆர்வலர்களை வேதனைப்படுத்துகிறது.

பல ரோடுகளுக்கு, பசுமை சேர்த்து, நிழல் அளிக்கும் மரங்களை காப்பாற்ற, நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு உதவுமா?



நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்படும் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுதல், கால்நடைகளில் இருந்து பாதுகாக்க தடுப்பு அமைத்தல் உட்பட பணிகளுக்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை.

பருவமழை காலங்களில் கிடைக்கும் தண்ணீரை கொண்டே மரங்கள் வளர்கின்றன. தற்போதைய கோடை வெப்பத்தால், ஆயிரக்கணக்கான மரங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வாக, பருவமழைக்காலம் துவங்கும் வரை, ரோட்டோர மரங்களை பராமரிக்கவும், தண்ணீர் ஊற்றவும், நெடுஞ்சாலைத்துறை வாயிலாக, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக தன்னார்வ அமைப்புகளின் உதவிகளையும் பெறலாம். உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, பசுமை பகுதி என்ற பெயரை உடுமலை தக்க வைக்க முடியும்.

ஊராட்சிகளில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மரக்கன்றுகள் நடுதல், பராமரித்தல் உட்பட பணிகளுக்கு, பல லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களில், இத்திட்டத்தில், மரக்கன்றுகள் நடவு செய்தல் பணிக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும், பயன்படுத்தப்பட்டனர். குறிப்பிட்ட மாதங்கள் மட்டும், திட்டம் செயல்பாட்டில் இருந்தது.

பின்னர், நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளின் நிலை குறித்து எந்த ஊராட்சிகளும் கண்டுகொள்ளவில்லை. தற்போதைய கோடை சீசனில், உறுதியளிப்பு திட்டத்தில், மரக்கன்றுகளை பராமரிக்க மீண்டும், தொழிலாளர்களை நியமிக்க வேண்டும்.

Advertisement