எலும்புகூடான மின்கம்பம் வண்டலுாரில் விபத்து பீதி

வண்டலூர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சியில், 15 வார்டுகளில் 2,047 மின் கம்பங்கள் உள்ளன.

இதில், 7வது வார்டுக்கு உட்பட்ட குறிஞ்சி நகர், 4வது தெருவில், வழிகாட்டி பலகைக்கு அருகே உள்ள மின் கம்பம், 20 ஆண்டுகளுக்கு முன் நடப்பட்டது.

இந்த மின்கம்பத்திலிருந்து 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக, இந்த மின்கம்பம் சிதிலமடைந்து, உருக்குலைந்த நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும், கீழே விழுந்து உயிர் பலி நிகழவும் வாய்ப்புள்ளது.

இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:

எலும்புக்கூடாக மாறிவிட்ட இந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் நட வேண்டும் என, கடந்த ஐந்து ஆண்டுகளாக மின்வாரியத்திடம் கோரிக்கை வைத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ஒவ்வொரு மழைக் காலத்திலும், மின்கம்பம் பலவீனமாகி வருகிறது. தற்போது, மின்கம்பத்தின் உட்பகுதியில் உள்ள இரும்புக் கம்பிகளும் துருப்பிடித்து, அடிப்பகுதி பலமிழந்து வருவதால், எப்போது வேண்டுமானாலும் சரிந்து கீழே விழலாம்.

உயிர் பலி நிகழும் முன், சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள், உருக்குலைந்து உள்ள மின்கம்பத்தை அகற்றி, வலுவான புதிய மின்கம்பத்தை உடனே நட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement