தேசிய மாதிரி நீதிமன்ற போட்டி ராமநாதபுரம் கல்லுாரி முதலிடம்

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரியில், தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டி, கடந்த 21ம் தேதி துவங்கியது.
இப்போட்டியில், 24 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லுாரிகள் பங்கேற்றன. இப்போட்டியில், ஒரு கல்லுாரிக்கு ஒரு குழு வீதம், மொத்தம் 24 கல்லுாரிகளில் இருந்து, 24 குழுக்களாக மாணவ, மாணவியர் போட்டியில் பங்கேற்றனர்.
ஒவ்வொரு குழுவினரும் வாதி, எதிர்வாதியாக வாதாடினர். மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் நீதிபதிகளாக இருந்து, மாணவர்களின் குழுக்களுக்கு, மதிப்பெண் வழங்கினர்.
இப்போட்டியின் இறுதிச்சுற்று நேற்று நடந்தது.
இதில், ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லுாரியும், நாமக்கல் அரசு சட்டக் கல்லுாரியும் தங்கள் வாதாடும் திறனை வெளிப்படுத்தின.
இதில், ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லுாரி, அதிக மதிப்பெண் பெற்று கோப்பையை கைப்பற்றியது.
மேலும், சிறந்த பெண் வாதுரையாளராக ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லுாரி மாணவி பர்ஹானாவும், சிறந்த ஆண் வாதுரையாளர் மற்றும் ஆராய்ச்சியாளராக மதுரை அரசு சட்டக் கல்லுாரி மாணவர் ஆல்பர்ட் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறந்த வாதுரையாளராக நாமக்கல் அரசு சட்டக்கல்லுாரி தேர்ந்தெடுக்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சவுந்தர் பரிசுகளையும், கோப்பையையும் வழங்கினார்.