பாழடைந்த போலீஸ் குடியிருப்புகளால் பொன்னேரி குடியிருப்புவாசிகள் அச்சம்

பொன்னேரி:பொன்னேரி, எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில், செங்குன்றம் சாலையை ஒட்டி, 45 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட போலீஸ் குடியிருப்புகள் தற்போது பயன்பாடு இன்றி, பாழடைந்து கிடக்கிறது.
இங்கு, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., தலைமை காவலர்கள் என, 28 குடியிருப்புகளுக்கான ஐந்து கட்டடங்கள் உள்ளன.
கட்டடங்கள் விரிசல்கள் ஏற்பட்டும், கான்கிரீட் பெயர்ந்தும் பலவீனமானதை தொடர்ந்து, 15 ஆண்டுகளாக இங்கு காவலர்கள் யாரும் வசிக்கவில்லை.
குடியிருப்புகள் பயன்பாடு இல்லாத நிலையில், தற்போது, இவை சமூக விரோதிகளின் கூடாரமாக மறி வருகிறது. மது அருந்துவது, கஞ்சா புகைப்பது என இருக்கின்றனர். பாம்பு, தேள் உள்ளிட்ட விஷஜந்துக்களும் இங்கு உள்ளன.
மேலும், கட்டடங்களில் செடிகள் வளர்ந்து உள்ளது. கட்டடங்கள் சேதம் அடைந்தும், விரிசல்களுடன் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன.
பாழடைந்து, பயன்பாடு இல்லாத போலீஸ் குடியிருப்புகளால், அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.
பொன்னேரியில் பணிபுரியும் போலீசார் பயன்படுத்தும் வகையில், பழைய கட்டடங்களை இடித்துவிட்டு,அங்கு புதிய குடியிருப்புகளை ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.