டில்லி நெரிசல் பலிகள் விழிக்குமா ரயில்வே துறை?

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில், மஹா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சென்ற வண்ணம் உள்ளனர்.

இதனால், நாட்டின் பல பகுதிகளில் உள்ள நகரங்களில் இருந்தும் பிரயாக்ராஜ் செல்லும் ரயில்களில் பயணிக்க, சில நாட்களாக கூட்டம் அலைமோதுகிறது. சமீபத்தில், மஹா கும்பமேளாவிற்கு செல்வதற்காக, டில்லி ரயில் நிலையத்தில் குவிந்திருந்த பயணியர், ரயிலில் முண்டியடித்து ஏற முற்பட்ட போது, நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி, 18 பேர் பலியாகினர்; பலர் படுகாயம் அடைந்தனர்.

பிரயாக்ராஜ் செல்ல பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என தெரிந்தும், அந்தக் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், தெளிவான திட்டத்தை செயல்படுத்தாதது, முன்பே இவ்வளவு கூட்டம் வரும் என கணிக்க தவறியது, அரசு மற்றும் ரயில் நிர்வாகத்தினரின் பொறுப்பற்ற செயல்பாடுகளே இந்த பலிகளுக்கு காரணம்.

'டில்லி ரயில் நிலைய நெரிசல் சம்பவத்திற்கு, நடை மேம்பாலத்தில் சென்ற போது, சில பயணியர் கால்தடுக்கி கீழே விழுந்ததும், அதை தொடர்ந்து மற்றவர்கள் அவர்கள் மீது விழுந்ததுமே காரணம்' என, ரயில்வே நிர்வாகம் தரப்பில் சொல்லப்பட்டாலும், அது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.

ரயில்கள் புறப்பாட்டில் ஏற்பட்ட தாமதம், அளவுக்கு அதிகமான பயணியருக்கு டிக்கெட் வழங்கியது, ரயில்கள் புறப்படும் நடைமேடைகளை கடைசி நேரத்தில் மாற்றியது போன்ற, ரயில்வே அதிகாரிகளின் குளறுபடிகளே நெரிசலில் பலர் உயிரிழக்க காரணம் என்று, ரயில்வே துறையின் முன்னாள் அமைச்சர் பவன்குமார் பன்சால் உட்பட, சில தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்க முடியாது.

நெரிசலில் பலர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்த உடன், ரயில்வே விதிமுறைகளின்படி, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா, 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா, 2.5 லட்சம் ரூபாய் நிவாரணமும் அறிவிக்கப்பட்டது.

பொதுவாக இழப்பீடு விதிமுறைகளின்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கோ, அவர்களின் குடும்பத்தினருக்கோ, ரொக்கமாக, 50,000 ரூபாய் வரை மட்டுமே வழங்க முடியும். அந்த விதிமுறைகளை மீறி, ரயில் நிலையத்திலேயே ரொக்கமாக இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது, அரசின் நெறிமுறைகளை கேள்விக்குறியாக்கி உள்ளது. அதுமட்டுமின்றி, நெரிசல் சம்பவத்திற்கான காரணங்களை கண்டறியாமல், அரசு மீது மக்கள் களங்கம் சுமத்தாமல் இருக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே, இழப்பீடு தந்த விவகாரம் பார்க்கப்படுகிறது.

ரயில் விபத்துகள் நடந்தவுடன், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுப்பது வழக்கமானது. அதுபோலவே, டில்லி நெரிசல் சம்பவத்தை தொடர்ந்தும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ராஜினாமா செய்ய வேண்டும் என, பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கை நிறைவேறாது என்றாலும், டில்லியில் நிகழ்ந்தது போன்ற அசம்பாவிதங்கள், நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் இனி நடைபெறாத வகையில், முறையான சீர்திருத்தங்களை ரயில்வே அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும்.

ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில், போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பாக, வழிகாட்டி குறிப்புகள் உள்ளன. அவற்றை முறையாக அமல்படுத்தினாலே, திருவிழாக்கள் மற்றும் மத சம்பந்தமான நிகழ்ச்சிகளில் பங்கேற்க குவியும் கூட்டத்தினரை கட்டுப்படுத்த முடியும்.

அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் தடுக்கவும் முடியும். அத்துடன், கூட்டத்தை கட்டுப்படுத்த நவீன தொழில்நுட்ப ரீதியான விஷயங்களையும் அமல்படுத்தலாம். ரயில்வே துறை இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும்; தவறுகள், உயிரிழப்புகள் நிகழாமல் தடுக்க வேண்டும்.

Advertisement