இந்தியாவுக்கு நிதி தேவையில்லை அமெரிக்க அதிபர் மீண்டும் பேச்சு
வாஷிங்டன் : இந்திய தேர்தல்களில் ஓட்டளிப்பை அதிகரிக்க அமெரிக்கா நிதியுதவி அளித்த விவகாரம் தொடர்பாக, தொடர்ந்து நான்காவது நாளாக அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப், தன் பேச்சில் குறிப்பிட்டார். இந்தியா நம்மை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது என, அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், அரசின் செலவினங்களை குறைப்பதற்காக, டி.ஓ.ஜி.இ., என்ற அமைப்பை உருவாக்கினார். இதன் தலைவராக, பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் உள்ளார்.
இந்தியாவில் தேர்தல்களின்போது ஓட்டுப் பதிவை அதிகரிப்பதற்காக வழங்கப்படும், 182 கோடி ரூபாய் நிதியை நிறுத்தி, எலான் மஸ்க் சமீபத்தில் உத்தரவிட்டார். இது நம் நாட்டில் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமெரிக்கா வழங்கிய நிதி எதற்காக, எங்கு, எப்படி பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பாக விசாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
'அமெரிக்கா எந்த நிதியுதவியையும் வழங்கவில்லை. வங்கதேசத்துக்கு வழங்கியதை இந்தியாவுக்கு வழங்கியதாக கூறுகின்றனர்' என, சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்நிலையில், இந்தியாவில் தேர்தல்களில் ஓட்டுப் பதிவு உயர்த்துவதற்காக நிதியுதவி வழங்கப்பட்டதாக, தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் அதிபர் டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டார்.
கன்சர்வேடிவ் அரசியல் செயல் மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப் இது குறித்து கூறியுள்ளதாவது:
என்னதான் நடக்கிறது. நாம் ஏன் மீண்டும் ஓட்டுச் சீட்டு முறைக்கு மாறக் கூடாது? அதற்கு இந்தியா ஏன் உதவக் கூடாது. இந்தியாவுக்கு நம்முடைய நிதியுதவி தேவையில்லை. அவர்களிடமே அதிக பணம் உள்ளது.
இந்தியாவில் தேர்தல்களுக்காக நாம் பணம் கொடுக்கிறோம்; ஆனால், அது அவர்களுக்கு தேவையே இல்லை. அவர்கள் நம்மை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். உலகிலேயே மிகவும் அதிக வரியை இந்தியா விதிக்கிறது. இந்தியா, 200 சதவீதம் வரை வரி விதிக்கிறது. ஆனால், நாம் அவர்களுடைய தேர்தலுக்காக நிதியை அளித்து வந்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
தமிழகத்தின் தொன்மையை பறைசாற்றும் செங்கை புத்தக திருவிழா
-
பீஹாரில் லாரி - வேன் மோதியதில் 7 பேர் பலி; ம.பியில்., 6 பேர் உயிரிழந்த பரிதாபம்
-
நான் பணக்காரன் வீட்டுப் பிள்ளை அல்ல; தாயின் வறுமை நினைவுகளை பகிர்ந்து துரைமுருகன் உருக்கம்
-
ஜெர்மனியில் ஆட்சியைப் பிடிக்கிறது எதிர்க்கட்சி; தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டார் அதிபர் ஒலாப்
-
ஆஸ்திரேலிய முதியவரின் இறுதி ஆசை; இந்தியாவில் சொன்ன வாக்கை காப்பாற்றிய மனைவி நெகிழ்ச்சி!
-
யு.எஸ்.எய்டு அமைப்பின் 2 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்; அதிபர் டிரம்ப் உத்தரவு