சிதம்பரத்தில் பிப்.26ல் நாட்டியாஞ்சலி துவக்கம்

சிதம்பரம் : சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 44ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா, பிப்.,26ம் தேதி தொடங்கி மார்ச் 2 வரை நடக்கிறது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 1981ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா துவங்கப்பட்டு 2014 வரை 33 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

அதனை தொடர்ந்து 2015ம் ஆண்டு பொது தீட்சிதர்களே தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சார்பில் நாட்டியாஞ்சலியை நடத்தினர். இதனால் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் தெற்கு வீதியில் உள்ள வி.எஸ்., டிரஸ்ட் வளாகத்தில் நாட்டியாஞ்சலி நடத்தி வந்தனர்.

கோவிலில் பொது தீட்சதர்கள் கடந்த 2015ம் ஆண்டு முதல் நடத்தி வந்த நாட்டியாஞ்சலி விழா 2022ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு 44ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் பிப்., 26ம் தேதி துவங்கி 5 நாட்கள் நடக்கிறது.

நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலர் சம்பந்தம் கூறியதாவது:

நாட்டியாஞ்சலியில் நாடகம், கதக், குச்சுப்புடி, மணிப்புரி நடனம் உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகதிகளில் இருந்து வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் 450க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்று நாட்டியாஞ்சலி செலுத்துகின்றனர். இதில், இளம் கலைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளித்துள்ளோம்.

சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி தொடங்கிய பிறகு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாட்டியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு கோவில்களில் சிவராத்திரி அன்று நாட்டியாஞ்சலி நடத்தப்படுகிறது. நாட்டியப் பள்ளியும் அதிகரித்துள்ளது. வெளிநாட்டு கலைகள் அனைத்தும் தமிழகத்தில் இருந்து சென்ற நாட்டிய கலைகள் தான் என்றார்.

பேட்டியின்போது, நாட்டியாஞ்சலி அறங்காவலர் குழுத் தலைவர் முத்துக்குமரன், துணைத் தலைவர் நடராஜன், பொருளாளர் கணபதி மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Advertisement